'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' மற்றும் 'நியோ கேசில் கிரியேஷன்ஸ்' இணைந்து தயாரிப்பில், பாரி இளவழகன் இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம் கடந்த ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, சுதர்சன், செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Continues below advertisement

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள 'அன்பே டயானா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தி ஊடகங்களை சந்தித்தது. அப்போது பேசிய இரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனர் சரவணன், இந்தப் படத்தில் இணைவதற்கு முன்பு தனக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாக பகிர்ந்துகொண்டார்.

படத்தில் இருந்து விலக சொன்னார்கள் 

இது குறித்து இரா சரவணன் கூறுகையில் "இந்தத் படத்தில் இணைய வேண்டாம் என்று பலர் என்னிடம் கூறினார்கள். திரையுலகைச் சேர்ந்த சில முக்கியமானவர்கள்கூட, 'இந்தப் படத்தில் இருந்து விலகிவிடுங்கள்' என்று அறிவுரை கூறினர். ஆனால் அந்த கருத்துகள் அனைத்தையும் தாண்டி, தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் மீது இருந்த நம்பிக்கையால்தான் நான் இந்தப் பயணத்தில் உறுதியாக நின்றேன்," என்று அவர் கூறினார்.

Continues below advertisement

மேலும், 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற வெற்றிப் படத்தை தயாரித்த பிறகும் யுவராஜ் கணேஷிடம் எந்த கர்வமும் இல்லை என்றும், "பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல; நல்ல படங்களை உருவாக்கி மனநிறைவுடன் வாழ்வதுதான் முக்கியம்" என்று அவர் தன்னிடம் கூறியிருந்ததாகவும் சரவணன் நினைவுகூர்ந்தார்.

அந்த நம்பிக்கையே இன்று 'அன்பே டயானா' வெற்றியாக மாறியிருப்பதாகவும், நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள் என்பதற்கு இந்த வெற்றியே சான்று என்றும் அவர் தெரிவித்தார்.