நடிகை அனன்யா பாண்டே, தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'கெஹ்ரையன்' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.ஷகுன் பத்ராவின் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அனன்யா தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஊடகம் ஒன்றுடனான பிரத்யேக பேட்டியில், படத்தில் தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அனன்யா பகிர்ந்துள்ளார்.ரிலேஷன்ஷிப் மீதான தனது பார்வையை எப்படி மாற்றிக்கொண்டார் என்பதை தி ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 நடிகையும் வெளிப்படுத்தினார்.
இதுமட்டுமின்றி, அனன்யா தனது வாழ்க்கையில் சரியான ரிலேஷன்ஷிப்பை ஏன் விரும்பவில்லை என்பதையும் பகிர்ந்தார். சரியான உறவை எப்படி வரையறுப்பீர்கள் என்று கேட்டபோது “பெர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப் என ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை, அதை நான் விரும்பவில்லை. ரிலெஷன்ஷிப்பில் நட்புதான் முக்கியம்.ரிலேஷன்ஷிப்பில் சின்னச் சின்ன சண்டைகள் எல்லாம் இருக்கும். அதுதான் சுவாரசியம்” என அவர் கூறினார்.
அனன்யா, நடிகர் இஷான் கட்டருடன் கடந்த சில காலமாக இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவிடுவதையும் காணலாம், சில நாட்களுக்கு முன்பு, அனன்யா மற்றும் இஷானின் இன்ஸ்டாகிராம் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அனன்யாவின் பதிவு ஒன்றுக்கு இஷான் ஆச்சரியமான கமெண்ட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.