லால் சலாம்
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பதாலே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்தின் பேச்சு உருக்கமானதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான போட்டியும் இல்லை என்பதை திட்டவட்டமாக பேசியுள்ளார். ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் தான் பேசியதை ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொண்டதாக அவர் விளக்கமளித்தார்.
ரஜினி படத்தின் நான் ஹீரோ
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது “ இந்தப் படத்தில் எனக்கு நிறைய பாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் படத்தில் நான் ஹீரோ என்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. மேலும் நடிகர் விக்ராந்துடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.
கவனத்தை ஈர்த்த அனந்திகா சனில்குமார்
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு நபர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அனந்திகா சனில்குமார். 2000 இல் பிறந்த அனந்திகா சனில்குமார் ஒரு 2கே கிட். 2022ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராஜமுந்திரி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மேட் படத்தில் நடித்தார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறாததால் தமிழில் சரியான வரவேற்பு அவருக்கு அமையவில்லை.
தற்போது லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனந்திகா சனில் குமார். தமிழில் நடிக்கும் இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கு வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் லால் சலாம் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் தமிழில் அவருக்கு ஒரு சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.