விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சியின் சிரிச்சாபோச்சு ரவுண்டில் ஹிட் ஆனவர்கள் விஜய் டிவியின் தற்போதைய காமெடி குழுவின் மூதாதையர்கள் என்று போற்றப்படுவார்கள். அதில் ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜி, ஜெயச்சந்திரன், ராமர், மைம் கோபி போன்றோரில் பலர் முழுவதுமாக சினிமாவுக்குள்ளேயே சென்றுவிட்டனர். விஜய் டிவிக்கு அவ்வபோது கெஸ்ட்டாக மட்டுமே வருவார்கள். ஆனால் திரைத்துறை எல்லோரையும் சிவகார்த்திகேயனாகவே டீல் செய்யாது அல்லவா, சிலரை மாகாபாவாகவும் பார்க்கும். அப்படி அந்த குழுவில் பீக்கில் இருந்து தற்போது எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு காணாமல் போயிருக்கும் அமுதவாணனிடம் இது குறித்து கேட்டால் எமோஷனலாக சில விஷயங்களை பகிர்கிறார்.
ஒரு காமெடியன் எங்குமே அவன் கஷ்டத்தை சொல்லக்கூடாது, நாளைக்கு அவனை பார்க்கும் மனிதர்கள் உங்க ஷோ பாத்தேன் செம்ம காமெடி, விழுந்து விழுந்து சிரிச்சேன் என்று நினைக்க வேண்டும், இன்டெர்வ்யூ பாத்தேன், ச்சேசே ரொம்ப கஷ்டம்ல, என்று நினைத்து விட்டார்கள் என்றால் நாளை நான் செய்யும் காமெடி எடுபடாது, என்னை சீரியசாகவே பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். எந்த இடத்தில் தவறு நடந்ததென்று தெரியவில்லை, ஒரு கால கட்டத்தில் சினிமாவுக்கும் டேட் கொடுக்க முடியவில்லை டிவிக்கும் கொடுக்கமுடியவில்லை. டைம் மேனேஜமெண்ட் செய்ய தவறினேன். மைக் மோகன், ராமராஜன் போன்ற நடிகர்கள் அந்த காலத்திலே நிறைய படங்கள் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருந்தர்கள். அவர்களிடமெல்லாம் சென்று இது போன்ற பிரச்சனைகள் வருவதாக கூறினேன், சில ஆலோசனைகளும் தந்தார்கள். நானும் விடாமல் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன்.
பிரபுதேவா போல டான்ஸ் ஆட சொல்வார்கள் திடீரென்று, அதற்கு உடலை எப்போதும் ஃபிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும், அதற்காக வீட்டில் ஒர்க் அவுட் செய்வேன், ஷூட்டிங் செல்வதற்கு முன்பு வார்ம் அப் செய்வேன், கபடிபோட்டிக்கு போகிறோமா ஷூட்டிங் போகிறோமா என்கிற சந்தேகம் எனக்கே வரும். மற்றவர்களை பார்ப்பேன் மிகவும் கேஷுவலாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து செல்வார்கள். இப்படிதான் உழைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் காணாமல் போய்விட்டதாக சொல்கிறார்கள்.
சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து டேட் கொடுக்கும்படியாக எனக்கு நிறைய பேர் அட்வைஸ் செய்ததால், அதற்கும் இதே போன்ற உழைப்பை கொடுத்தேன். அங்கு சென்றும் நான் சும்மா இருக்கவில்லை, உழைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் டிவியில் வருவதுதான் மக்களிடம் எளிதில் சென்று சேர்கிறது, சினிமாவில் நடிப்பது பல நேரங்களில் எடிட் ஆகிவிடுவதும், மக்களை சென்று உடனடியாக சேராததும், ஒரு மாதிரி என்னை காணாமல் செய்திருக்கலாம். ஆனாலும் தொடர்ச்சியாக நான் செய்ய வேண்டியதை செய்துகொண்டுதான் இருக்கிறேன். இப்பொழுது நான் காமெடி செய்து யாரும் சிரிக்கவில்லை என்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன், எதுவும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்று, ஆனால் என் வேலை நன்றாகத்தான் இருக்கிறது, எனக்கு காமெடி வருகிறது. அது இல்லை அங்கு பிரச்சனை, அங்கு ஒரு அரசியல் நடக்கிறது, வளர்ச்சியை அது தடுப்பதுதான் அசிங்கமாக இருக்கிறது. வடிவேல் பாலாஜிக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தன, அவர் இறந்ததற்கு காரணம் டிப்ரஷனும்தான்.
பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றாலும், நான் அடைய வேண்டிய இடத்திற்கு செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் பல வருடங்களாக தற்கொலை செய்துகொள்ள தூண்டிக்கொண்டிருக்கிறது, இன்று ஒரு நாள் போகட்டும், ஒரு வாரம் போகட்டும், ஒரு மாதம் பார்ப்போம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டிருக்கிறேன். அப்படியே நான்கைந்து வருடங்கள் ஓடிவிட்டன. மிக விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும்." என்று எமோஷனலாக கூறினார்.
தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .