ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கு 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
இதற்கிடையில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த அதிமுக நீண்ட இழுபறிக்குப் பின் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்த் ஆகியோரும் களம் காண்கின்றனர்.
ஆனால் வெகுவிரைவாக வேட்பாளர் சிவபிரசாந்தை அறிவித்த அமமுக, தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனால் அதிமுக,காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இடைத்தேர்தலில் நிலவுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘தங்களிடம் யாரோ பேசியதால் தான் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றதாக கூறுகிறார்கள். அப்படியெல்லாம் யாரும் எங்களிடம் பேசவில்லை’ என தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு சின்னம் ஒதுக்கவில்லை. அதனால் தான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்தார். அதேசமயம் 2024 பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் கூறினார்.
அதேசமயம் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் வென்று விடுவார்களா என கேள்வியெழுப்பிய அவர், அது தவறானவர்களின் கையில் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் திமுகவை என்கிற தீய சக்தியை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே தன் நிலைப்பாடு என கூறிய டிடிவி தினகரன், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற எண்ணம் அந்த கட்சி தொண்டர்களுக்கு இல்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், பாஜக ஆதரவு கேட்டு உங்களை அணுகினால் உங்கள் நிலைபாடு என்ன? என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு இது சினிமா இல்லை, கிளைமேக்ஸ் மாற்றுவதற்கு...அப்படி பாஜக வந்தால் உங்களை அழைத்து பேசுகிறேன் என்றும், இடைதேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்தார்.