9 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்....ஆமிர் கான் நடித்துள்ள சிதாரே ஜமீன் பர் விமர்சனம்
Sitaare Zameen Par Review : ஆமிர் கான் நடித்து இந்தியில் வெளியாகியுள்ள சிதாரே ஜமீன் பர் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்

சிதாரே ஜமீன் பர்
2007 ஆம் ஆண்டில் ஆமிர் கான் நடித்து இயக்கி வெளியான படம் தாரே ஜமீன் பர். கற்றல் குறைப்பாடுடைய சிறுவனை மைய கதாபாத்திரமாக வைத்து உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெற்றது. இப்படத்தின் தொடர்ச்சியாக உருவகியுள்ள படம் சிதாரே ஜமீன் பர். ஸ்பேனிஷ் திரைப்படமான சாம்பியன்ஸ் படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது.
திவி நிதி ஷர்மா எழுதி பிரசன்னா ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆயுஷ் பன்சாலி, டோலி அலுவாலியா, குர்பால் சிங், பிரிஜேந்திர கலா, பிரிஜேந்திர கலா இப்படத்தில் நடித்துள்ளார்கள். தங்கல் படத்திற்கு பின் ஆமிர் கான் நடித்த லால் சிங் சட்டா திரைப்படம் தோல்வியை தழுவியது. தற்போது சிதாரே ஜமீன் பர் படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்
சிதாரே ஜமீன் பர் விமர்சனம்
"தாரே ஜமீர் பர்' படத்தில் ஓவிய ஆசிரியராக வந்த ஆமீர் கான் இந்த படத்தில் பாஸ்கெட் பால் பயிற்சியாளராக வருகிறார். குடிபழக்கத்தால் அடிக்கடி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் அவரை அறிவுசார் குறைபாடுள்ளவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சியளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த புதிய இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சி அளிப்பதே படத்தின் கதை. கற்றல் குறைபாடுள்ள உண்மையான நபர்களை தேர்வு செய்து இந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார்கள். படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிக்க முக்கியத்துவம் கொடுத்து ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார் ஆமிர் கான்.
கற்றல் குறைபாடுள்ளவர்களை வலிமையற்றவர்களாகவோ , பாவமாக இல்லாமல் அவர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டியிருக்கிறார்கள். மேலும் மற்ற சராசரி மனிதர்களைப் போல அவரவருக்கு ஒரு நார்மல் இருக்கிறது என்பதே இந்த படத்தின் மெசேஜ். நிறைய சின்ன சின்ன உணர்ச்சிகளை இந்த படம் அடையாளப்படுத்தினாலும் பல இடங்களில் தேவைக்கு அதிகமாக கருத்து சொல்வது ஒரு மைன்சாக அமைகிறது. " என படத்திற்கு வெளியான பெரும்பாலான விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன























