தனது பிகினி உடையை ட்ரோல் செய்த நெட்டிசன்களை விளாசியுள்ளார் ஆடை நாயகி அமலாபால்.


நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்றொரு சர்ச்சைக் கதைக்களம் கொண்ட படம் மூலம் அறிமுகமானவர். மைனா படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் ஆடை என்ற படத்தில் அவர் நடித்ததற்காகப் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். எதற்கெடுத்தாலும் பெட் கட்டும் நடிகை ஆடையில்லாமல் ஒரு கட்டிடத்தில் மாட்டிக் கொள்ளும் கதைதான் ஆடை. அந்தப் படத்தில் அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியானதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். ஆனால் கதையில் வரும் பாத்திரம் போலவே தனது கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி அவர் துணிச்சலாகப் பேசி அப்லாஸ் பெற்றார்.


இந்நிலையில் அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்தார். அதில் அவர் பிகினி உடையில் கடற்கரையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன. பொதுவாக அனன்யா பாண்டியா, சோனம் கபூர், ஆலியா பட் என பாலிவுட் பிரபலங்களால் தான் அவ்வப்போது பிகினி உடையில் ஸ்டன்னிங் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவர். ஆனால், இந்த முறை ஒரு தென்னிந்திய நடிகை பிகினி உடை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால், அவரை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை ட்ரோல் செய்யத் தொடங்கினர் நெட்டிசன்கள். சும்மா விடுவாரா அமலா பால்? நெட்டிசன்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.




இன்ஸ்டாகிராமில் அவர் நெட்டிசன்களுக்குப் பதிலளித்துள்ளார். நான் எனது வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறேனோ அப்படியே வாழ்வேன். பெண்களை சமூகவலைதளங்கள் வாயிலாக தாக்குவதை நிறுத்துங்கள். ஒரு பெண் அவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரின் விருப்பம், தேர்வைப் பொருத்தது. அதில் மூன்றாம் நபர் தலையிட்டு கருத்து கூற, இப்படிச் செய், அப்படிச் செய் என்றெல்லாம் உத்தரவிட அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவரி இந்தப் பதிவு வெகுவாகப் பாராட்டைப் பெற்று வருகிறது.






அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் பாலிவுட்டைச் சேர்ந்த ஒரு பாடகரை அவர் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், அந்தப் படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. அது குறித்து கிசுகிசுக்கப்பட்ட போதும் திருமணமோ இரண்டாவது திருமணமோ எல்லாமே தனது தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட முடிவு என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


நடிகைகள், தங்களைச் சுற்றி எழும் கிசுகிசுக்கள் பற்றியெல்லாம் புழுங்கி, வருந்திய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பாலியல் தொந்தரவாக இருந்தாலும் சரி சைபர் புல்லியிங்காக இருந்தாலும் சரி பொதுவெளியில் போட்டுடைத்து கெத்தாக வலம் வரும் காலம் இது.