சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தனது கடந்தகால காதல் அனுபவங்கள், ஆறு முறை ஏற்பட்ட காதல் முறிவுகள், முன்னாள் காதலரால் சந்தித்த துன்புறுத்தல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட வாழ்க்கையின் கடினமான தருணங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். குறிப்பாக, ஒரு தலையாகக் காதலித்த நபர் தன்னை நிராகரித்ததால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாகவும், அந்தச் சூழலில் தனது வாழ்க்கைக்குள் வந்த சஞ்சீவ் தனக்குப் பக்கபலமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்தத் தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இதே தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவ் கார்த்திக் உடன் காதல் மலர்ந்தது. இருவரும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்தத் தம்பதிக்கு அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் ஆல்யா தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார். குறிப்பாக 'ராஜா ராணி 2' தொடரிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

Continues below advertisement

ஆறு முறை காதல் தோல்வி!

சமீபத்தில் யூடியுப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆல்யா மானசா தனது கடந்த காலத்தை பற்றி பகிர்ந்துகொண்டார் "எனது வாழ்க்கையில் இதுவரை ஆறு முறை காதல் முறிவுகளைச் சந்தித்திருக்கிறேன். நான் உண்மையாகவே ஒருவரைக் காதலித்தேன். ஆனால் அந்தக் காதல் ஒருதலைக் காதலாகவே முடிந்தது. நான் ஆழமாக நேசித்த நபர் என்னை நிராகரித்தார். அந்த நிராகரிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதளவில் மிகவும் உடைந்து போனேன். அந்தச் சூழலில் என்னை நானே காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் கூட எனக்கு ஏற்பட்டன.

சில உறவுகளில் நான் உண்மையாகவும் முழுமையாகவும் இருந்தேன். ஆனால் எதிர்முனையில் இருந்தவர்கள் அதே அளவிலான அன்பையும் அர்ப்பணிப்பையும் எனக்குத் தரவில்லை. இதனால் அடுத்தடுத்த காதல் உறவுகளிலும் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது." என்று தெரிவித்துள்ளார். 

முன்னாள் காதலரால் துன்புறுத்தல்.. சஞ்சீவ் கொடுத்த ஆதரவு!

தொடர்ந்து பேசிய ஆல்யா "ஒரு முன்னாள் காதலரால் மிகக் கடுமையான துன்புறுத்தல்களையும் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலகட்டம் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் சஞ்சீவ் என் வாழ்க்கைக்குள் வந்தார்.

சஞ்சீவ் ஒரு ஹீரோவைப் போல என் வாழ்க்கைக்குள் வந்தார். அந்தக் கடினமான சூழலில் எனக்குத் துணையாக நின்று, அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவினார். என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு சஞ்சீவ் எனக்குக் கொடுத்த ஆதரவும் முக்கியமான காரணம்." என்று கூறியுள்ளார்.