தென்னிந்திய உணவுகளின் சிறப்பே அதன் அறுசுவை தான். இதனை மிஞ்சவோ அல்லது இணையாகவோ வர எந்த ஒரு நாடாளும் முடியாது. இங்கு அறுசுவை மட்டுமின்றி ஆரோக்கியமும் உணவோடு ஒன்றியே இருக்கும். நமது நாட்டின் பாரம்பரியமான உணவுகளே மருந்தாக விளங்குகிறது என்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டும்.
தென்னிந்திய உணவுகள் மீது விருப்பம் கொண்ட பாலிவுட் பிரபலம் ஆலியா பட் தனது சமயலறையில் இருந்து நமக்காக சில ஆரோக்கியமான மற்றும் உடல் எடையை குறைக்க கூடிய ஸ்பெஷல் ரெஸிபிகளை பகிர்ந்துள்ளார்.
அந்த வரிசையில் முதலில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான கலோரிகளை கொண்ட சுரைக்காயை வைத்து ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும்.
தென்னிந்திய ஸ்டைலில் ஆலியாவின் சுரைக்காய் சப்ஜி இதோ:
1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு தாளித்து, பெருங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய சுரைக்காயை சேர்த்து வதக்கி இரண்டு நிமிடங்கள் முடி வைக்கவும். பிறகு 1/4 டீஸ்பூன் உலர் மாங்காய் தூள், 1/4 டீஸ்பூன் சோம்பு தூள், 1/4 டீஸ்பூன் ஜீரக தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் தனியா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு 2 ஸ்பூன் தேங்காய் துருவல், பொடியை நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிய பிறகு சூடாக பரிமாறவும்.
கீட்டோ உப்புமா:
ஆலியாவின் அடுத்த ரெசிபி கிடோ காலிஃபிளவர் உப்புமா. நமது பாரம்பரிய ரவா உப்புமா போலவே சுவை கொண்ட இந்த உப்புமாவில் கார்போஹைட்ரேட், கலோரி குறைவாக உள்ளது. இது செய்வதும் மிகவும் எளிது.
செய்முறை :
காலிஃபிளவர் பூக்களை தேங்காய் துருவல் போல் துருவி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை சூடாக்கி கடுகு பொரித்து, பச்சைமிளகாய், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறுது வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், பிறகு துண்டுகளாக நறுக்கிய பீன்ஸ், ப்ரோக்கோலி, காளான் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். துருவிய காலிஃபிளவர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் மூடிவைத்து 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும். பிறகு பொடியை நறுக்கிய கொத்தமல்லி இலை, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து சூடாக பரிமாறவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்