பாலியல் சமத்துவம் குறித்து பேசிய ஆலியா பட் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.


ஆலியா பட் எந்த அளவிற்கு பாராட்டுக்களை பெறுகிறாரோ அதே அளவிற்கு அவருடைய கருத்துக்களுக்காக விமர்சிக்கவும் படுகிறார். அண்மையில் ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்திற்கான பிரமோஷனின் போது பாலியல் சமத்துவம் குறித்து அவர் பேசியக் கருத்துக்களுக்கு இணையதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆலியா பட் “ஒரு பெண் தன்னை முன்னேற்றிக் கொண்டால் மட்டுமே தனது குடும்பத்திற்கும் மற்றும் நாட்டிற்கு பயனுள்ளவளாக இருக்க முடியும். அவளது குழந்தைகளுக்கு பயனுள்ளவளாக இருக்க முடியும்.” என கூறியுள்ளார் ஆலியாபட். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆலியாவின் பேச்சு அபத்தமாக இருக்கிறது என அவரை விமர்சித்துள்ளார்கள்.


நெட்டிசன் ஒருவர் “ பெண்கள் முன்னேற்றம் அடைவது அவர்களின் உரிமை. ஆனால் தங்களது குடும்பம் மற்றும் நாட்டின் பயண்பாட்டிற்காக அவர்கள் முன்னேற வேண்டும் என்று சொல்வது சுத்த அபத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


மற்றொரு நபர் ஆலியா பட் தனக்கு எழுதிகொடுக்கப்பட்ட ஒரு ஸ்க்ரிப்ட்டை மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.


ஆலியா நடித்து வரும் படங்கள்


ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட இருக்கும்  திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தங்கல் படத்தை இயக்கிய  நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் ராமனாகவும் ஆலியா பட் சீதையாகவும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முந்தையதாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஆலியா பட் உறுதி செய்யப்பட்டுள்ளார். கூடுதலானத் தகவல் என்னவென்றால்  ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வெகு நாட்களாக விவாதம் செய்து வந்தது படக்குழு. தற்போது வெளியாகி இருக்கும் தகலவலின்படி கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்த யாஷ் இந்தப் படத்தில் ராவணனாக நடிக்க இருக்கிறார் என்கிற சுவாரஸ்யத் தகவல் வெளியாகியிருக்கிறது.


நிதேஷ் திவாரி


தங்கல் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி புகழ்பெற்றவர் நிதேஷ் திவாரி. தங்கல் திரைப்படத்தில் வெற்றிக்குப் பிறகு பல்வேறு பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை எல்லாம் மறுத்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் ஷ்ரத்தா கபூரை வைத்து சிச்சோரே என்கிறப் படத்தை இயக்கினார் நிதேஷ். தற்போது வருன் தவான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியவர்கள் நடிக்கும் பவால் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.