“நோ கட்ஸ் நோ க்ளோரி” என துணிவு பட வாசகத்துடன் கூடிய டீசர்ட் அணிந்துள்ள வெங்கட் பிரபுவின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.


துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித் அடுத்ததாக நடிக்கும் ஏகே 62 படம் குறித்த அப்டேட் நாளை அதிகாரப்பூர்வமாக  வெளியாகும் என ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


விக்னேஷ் சிவன் போய் மகிழ் திருமேனி...


முன்னதாக  இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் வெளியான நிலையில் சென்ற வாரம் விக்னேஷ் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகாத நிலையில், முன்னதாக விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62வை நீக்கியதும், அஜித் புகைப்படத்தை கவர் ஃபோட்டோவிலிருந்து நீக்கியதும் இத்தகவல்களை உறுதி செய்தன.


இந்நிலையில், இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும், சந்தோஷ் நாராயணன் ஏகே 62 படத்துக்கு இசையமைக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


வெங்கட் பிரபு இணைந்தாரா?


இவற்றுடன் மற்றொரு புறம் இயக்குநர் வெங்கட் பிரபு No Guts No Glory எனும் துணிவு பட வாசகம் பொறித்த டீசர்ட் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.


ஏற்கெனவே 2011ஆம் ஆண்டு அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மங்காத்தா படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்த நிலையில், தொடர்ந்து இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என அஜித் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்து வருகின்றனர்.


இந்நிலையில், வெங்கட் பிரபுவின் இந்த ஃபோட்டோ அஜித் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஏகே  62 படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறாரா எனும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


 






அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், அஜித்தின் அடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தான் என அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும் ஏகே 62, மங்காத்தா 2 பற்றிய அறிவிப்பாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மங்காத்தா 2


இந்த ஆண்டு பொங்கலுக்கு  வெளியான துணிவு படம்,  அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கோலிவுட்டில் ஹிட் அடித்துள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான துணிவு படம் உலகம் முழுக்க ரூ. 250 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


துணிவு படத்துடன் வாரிசு படமும் ஹிட் அடித்துள்ள நிலையில் தன் அடுத்த படமான லியோவுக்கான வேலைகளில் விஜய் பிசியாகிவிட்டார். இந்நிலையில்,  துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித் அடுத்த பட அறிவிப்பை எப்போது வெளியிடப்போகிறார் என ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.