நடிகர் அஜித்குமார் தொடர்பான கார் ரேஸிங் ஆவணப்படம் 2026ம் ஆண்டு வெளியாகும் தேதி எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் ஒரு பக்கம் திரைப்படம், இன்னொரு பக்கம் கார் ரேஸிங் என பிஸியான ஷெட்யூலில் வலம் வருகிறார். அவருக்கு 2025ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என சொல்லலாம். இந்தாண்டு குடியரசு தினத்தில் அவர் மத்திய அரசால் கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்களும் வெளியானது.
இதில் பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் இல்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனைப் படைத்தது. அதுமட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அடுத்தப்படம் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கார் ரேஸ் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்.
கார் ரேஸிங்கில் கலக்கும் அஜித்
நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் களமிறங்கி கலக்கி வருகிறார். அவர் தலைமையிலான அணி சில போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அஜித் உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்துவதாக கொண்டாடினர். இந்த நிலையில் அவரின் கார் ரேஸிங் தொடர்பான ஆவணப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.
கார் பந்தயத்தில் அஜித் சந்தித்த சவால்கள், காயங்கள், வலிகள் என அனைத்தையும் பேசியிருக்கும் இந்த ஆவணப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்தது. 15 ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் முழு வீச்சில் கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இதற்காக அஜித் குமார் ரேஸிங் என்ற குழுவை தொடங்கினார். அஜித் ரேஸிங் தொடர்பான ஆவணப்படத்தை இயக்குநர்கள் ஏ.எல்.விஜய் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் ரேஸ் டிராக்கில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.
சினிமாவில் அஜித் தனது அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் இன்னும் செல்லவில்லை. இப்படியான நிலையில் 2026ம் ஆண்டு ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படம் மே 1ம் தேதி அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்முறையாக ஒரு ஆவணப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.