Good Bad Ugly Teaser: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். அஜித்குமார் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக திரைப்படம் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 6ம் தேதி விடாமுயற்சி படம் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களுடன் படம் வரவேற்பைப் பெற்றது.
டீசர் எப்போது?
அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தைக் காட்டிலும் அவர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏனென்றால் விடாமுயற்சி படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் அந்த படம் அவரது வழக்கமான படம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஆனால், குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரும், அஜித்தின் கெட்டப்பும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது போல இருந்தது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் வரும் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மிரட்டும் ஜிவி பிரகாஷ் இசை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான குட்டி டீசரில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டீசர் வெளியீட்டு அறிவிப்பிற்கு வெளியான ப்ரமோ வீடியோ இணையத்தை அதிரவைத்து வருகிறது. டீசருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித் வித்தியாசமான கேங்ஸ்டராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜிவி பிரகாஷின் இசை படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் லோடிங்:
படத்தின் டீசர் வெளியீட்டு ப்ரமோ அறிவிப்பு வீடியோவில் டீசர் 28ம் தேதி மாமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சம்பவம் லோடிங்.. கொழுத்துவோமா என்று பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஜித் மிகவும் உடல் இளைத்து பழைய தோற்றத்தில் நடித்துள்ளார். இளமை, நடுத்தர வயது நபர் என மாறுபட்ட தோற்றத்தில் அஜித் நடித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகிறது.