எம் எஸ் பாஸ்கர்..


நாடகப் பின்னணியில் இருந்த வந்த எம் எஸ் பாஸ்கர் திரைப்படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கனகச்சிதமாக செய்யக்கூடியவர். தற்போது வயது முதிர்ந்த காலத்திலும் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வருகிறார். வெள்ளித்திரையில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த டாணாக்காரன் திரைப்படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி பல வருடங்களாகவே அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு தக்க நியாயம் சேர்க்கிறார். 8 தோட்டாக்கள் படத்தில் வித்தியாசமான ரோல், ஏ1 திரைப்படத்தில் காமெடி ரோல், கமல்ஹாசன் உடன் சேரும் அத்தனை திரைப்படங்களும் என தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கமுடியாத வேலையை செய்து வருகிறார். அவர் அஜித்துடன் இணைந்து கிரீடம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அஜித் குறித்து அவர் பேசுகையில் அவருடைய குணநலன்கள் குறித்து பேசினார். 



அஜித்தின் பண்பு


அஜித்துடன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு குறித்து பேசுகையில், "நடிகர் அஜித் போன்ற மரியாதை தெரிந்த மனிதரை பார்க்க முடியாது. கிரீடம் பட சூட்டிங்கின் போது நானும் மனோபாலாவும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த அஜித் எங்களை உட்காரவைத்து கொண்டு, அவர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். உக்கருங்கன்னு சொன்னா, 'இல்ல சார் பேக் பெயின், உக்கார முடியாது'ன்னு சொன்னாரு. உடனே நாங்க ரெண்டு பேரும் எந்திரிச்சோம்.அவரு, 'எந்திரிக்காதீங்க, உக்காருங்க உக்காருங்க'ன்னு எங்களை கம்பெல் பண்ணி உக்கார வச்சாரு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே சங்கடமா இருந்துச்சு.


ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம், இடைல கொஞ்ச நேரம் அவரு விருப்பப்படி இருப்பாருன்னு நாம விலகிக்கலாம்ன்னு போனா, எங்க போறீங்கன்னு கேக்குறார்', இல்ல சார் ஒரு டீ சாப்பிட்டுட்டு வந்துடறோம்னு சொன்னா உடனே அங்கேயே டீ எடுத்துட்டு வர சொல்றார். அதையும் அதிகாரத் தொனில சொல்லல, ரொம்ப பக்குவமா, 'இவங்க ரெண்டு பேருக்கும் டீ வேணுமாம் கொஞ்சம் போட்டு கொடுக்க முடியுமா'ன்னு கேக்குறார். என்ன மாதிரியான பண்பு, அதனாலதான் இந்த உயரத்துல இருக்கார்.


அவரை எப்படி புடிக்காம போகும் நம்ம மக்களுக்கு. கிட்டத்தட்ட 8 முதல் 9 மணி நேரம் நாங்க பேசிட்டு இருந்தோம், முழுக்க நின்னுட்டே இருந்தார். அன்னைக்கு ஃபைட் ஸீன் வேற எடுத்துட்டு இருந்தாங்க. அதுலயும் அவ்வளவு ஈடுபாட்டோட கலந்துக்குறார். எப்படிப்பட்ட மனிதர் அவர்," என்று வியந்து பேசினார். 



ஏகே 61 அப்டேட்


வலிமை வெற்றியை தொடர்ந்து முன்றாவது முறையாக அதே கூட்டணியில் தற்போது அஜித் 61 வது படம் உருவாகி வருகிறது. போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் வங்கி மோசடியை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி பேராசிரியர் மற்றும் வில்லன் கேரக்டரில் அஜித் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திக்கனி, ஜான் கோக்கன், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயன்று வருகின்றனர்.