ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். கொரோனா, ஊரடங்கு என தொடர்ந்து இடையூறுகளை சந்தித்த வலிமை படக்குழு தற்போதுதான் ரிலீஸுக்கு நெருங்கி வந்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வலிமை படக்குழுவை கொரோனா சோதிக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா:
தமிழகத்தில் பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,03,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2731 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 674 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்த திடீர் அதிகரிப்பால் தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அடுக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு தடைவிதிப்பது, கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு போன்ற கட்டுப்பாடுகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக தற்போது 50% இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட திரையரங்குகள் முழுமையாக மூடக்கூட வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசு வட்டாரம்.
வலிமைக்கு சிக்கல்:
பல்வேறு சிக்கலுக்கு பிறகு இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ள வலிமை படக்குழுவுக்கு கடைசி நேரத்தில் தலைவலியாய் அமைந்துள்ளது கொரோனா. ஏற்கெனவே பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர்திரைப்படம் பின் வாங்கியது. ஆனால் வலிமை பின் வாங்காமல் உறுதியாக நின்றது. கண்டிப்பாக படம் ஜனவரி 13 ரிலீஸ் என தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார். ஆனால் படக்குழு தயார் என்றாலும் அரசு தயாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒருவேளை திரையரங்குகள் மூடப்பட்டால் வலிமை மீண்டும் காத்திருப்பு பட்டியலுக்கு செல்லும் எனத் தெரிகிறது
போனியைச் சுற்றும் ஓடிடி:
தியேட்டர் வெளியீட்டு உரிம வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டாலும் போனி கபூரை அனைத்து தரப்பு ஓடிடி நிறுவனங்களும் சுற்றி வருகின்றனவாம். கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.