குட் பேட் அக்லி


நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் பின்னணி இசை ஜி.வி பிரகாஷ் உருவாக்குகிறார். 


குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது. பின் ஸ்பெயின் , பல்கேரியா என வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இன்னும் ஒரு சில நாட்களே படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகரகள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாவதற்கான சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன. 


இணையத்தில் கசிந்த குட் பேட் அக்லி காட்சிகள்


படப்பிடிப்பு தொடங்கியது முதலே ஃபர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் என ரசிகர்களை மிரள வைத்து வருகிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பில்லா , மங்காத்தா படத்திற்கு பின் இப்படம் அஜித்தின் கரியரில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி அஜித்தின் வெவ்வேறு லுக் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.






அந்த வகையில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. கைகளை பின்னால் கட்டியபடி செம கெத்தாக அஜித் நிற்கும் இந்த புகைப்படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் கூலி படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார். ஆனால் அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை வரும் பொங்கலுக்கு அவர்களின் காத்திருப்பு ஏமாற்றத்தில் முடியாது என்பது இந்த புகைப்படத்தின் வழி தெரிய வருகிறது.