அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்


கடந்த மே1 ஆம் தேதி நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த பில்லா , தீனா உள்ளிட்டப் படங்கள் திரையரங்கில் ரீரிலீஸ் ஆகின. இதனால் அஜித் ரசிகர்கள் முழு ஏற்பாட்டோடு திரையரங்குகளை அமர்க்களப்படுத்தினார்கள். அதே நேரம் எல்லை மீறி திரையரங்கத்திற்கு உள்ளாக பட்டாசுகளை வெடிப்பது போன்ற சட்ட விரோத செயல்களிலும் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.


மேலும் சென்னை ரோகினி திரையரங்கத்திற்குள் கில்லி படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உள்ளே புகுந்து அஜித்தின் பெயரை கத்திவிட்டு ஓடியுள்ளார்கள் . இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இது தவிர்த்து அஜித் ரசிகர் ஒருவர் விஜயின் கில்லி படத்தின் பேனரை கிழித்த நிகழ்வு அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது.


கில்லி பட பேனரை கிழித்த ரசிகர்


கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி விஜய் நடித்த கில்லி படம் உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. 20 கோடிக்கும் மேலாக வசூல் செய்த கில்லி படம் ரிரீலீஸ் படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்நிலையில் சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள காசி திரையரங்கத்தில் கில்லி படத்தின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதே திரையரங்கில் அஜித் குமாரின் தீனா படமும் வெளியாகியிருந்த நிலையில் அங்கு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் தனது பைக் சாவியால் கில்லி படத்தின் பேனரை கிழித்தார்.


இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 


மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்






பிரச்னை பெரிதாகும் சூழலில் பேனரை கிழித்த அந்த அஜித் ரசிகர் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் “தீனா படம் பார்க்க திரையரங்கத்திற்கு வந்திருந்தேன். ஒரு ஆர்வத்தில் பைக் சாவியால் கில்லி பட பேனரை கிழித்துவிட்டேன். இந்த வீடியோ மூலமாக அண்ணன் விஜயிடமும் தமிழக வெற்றிக் கழகம் நண்பர்களிடமும் தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இந்த மாதிரியான செயல்களில் நான் ஈடுபட மாட்டேன்“ என்று அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது