தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித். இன்று அவருக்கு 53வது பிறந்த நாள் ஆகும். தற்போது அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


தமிழ் சினிமாவில் மிகவும் கடின உழைப்பால் முன்னுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது ஆரம்ப காலம் முதல் உச்சநட்சத்திரமான பிறகு வரை ஏராளமான அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்தார். இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் தனது திரை வாழ்க்கையில் 16 அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். விஜயகாந்த், முரளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகளவு புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்த நடிகர் என்ற பெருமைக்கு அஜித் சொந்தக்காரர் ஆவார்.


ராசி - முரளி அப்பாஸ்:


1997ம் ஆண்டு வெளியான காதல் படமான ராசி படத்தின் இயக்குனராக முரளி அப்பாஸிற்கு அதுவே முதல் படம் ஆகும். அந்த படத்தில் அஜித்குமார் நாயகனாக நடித்திருப்பார்.


உல்லாசம் - ஜேடி – ஜெர்ரி:


அமிதாப் பச்சன் தமிழில் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் உல்லாசம். இந்த படத்தை இரட்டை இயக்குனர்களாக ஜேடி – ஜெர்ரி இயக்கியிருந்தனர். இந்த படத்தின் மூலமாக அவர்கள் இயக்குனர்களாக அறிமுகமானார்கள். இந்த படத்தின் நாயகனாக அஜித் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரமும் நடித்திருப்பார். இந்த படம் 1997ம் ஆண்டு வெளியானது.


ரெட்டை ஜடை வயசு – சிவகுமார்:


அறிமுக இயக்குனராக சிவக்குமாருக்கு அமைந்த படம் ரெட்டை ஜடை வயசு. அஜித், ரம்பா, கவுண்டமணி இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படமும் 1997ம் ஆண்டு வெளியானது.


காதல் மன்னன் – சரண்:


அஜித்குமாரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை தந்த திரைப்படம் காதல் மன்னன். இந்த படத்தை இயக்கிய சரணுக்கு இதுவே முதல் படம். அஜித்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களான அமர்க்களம், அட்டகாசம் படங்களையும் அவரே இயக்கியிருந்தார்.


தொடரும் – ரமேஷ் கண்ணா:


தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், கே.எஸ்.ரவிக்குமாரின் பல படங்களின் கதைகளுக்கு சொந்தக்காரருமான ரமேஷ் கண்ணா அறிமுக இயக்குனராக இயக்கிய படம் தொடரும். அஜித் நாயகனாக நடித்த இந்த படம் 1998ம் ஆண்டு வெளியானது.


வாலி – எஸ்.ஜே.சூர்யா:


நடிகர், இயக்குனர் என தமிழ் திரையுலகின் மிகப்பெரிய பிரபலமான எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக இயக்கிய திரைப்படம் வாலி. இந்த படத்தின் வெற்றி எஸ்.ஜே.சூர்யா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வாலி படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியது.


நீ வருவாய் என – ராஜகுமாரன்:


தேவயானியின் கணவர் முதன் முதலில் இயக்கிய நீ வருவாய் என படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார் அஜித். பார்த்திபன் நாயகனாக நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.


முகவரி – வி.இசட்.துரை:


அஜித் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படுவது முகவரி. அஜித்தின் நடிப்பிற்கு தீனியாக, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் அமைந்த முகவரி வி.இசட்.துரைக்கு முதல் படம் ஆகும்.


உன்னைக் கொடு என்னைத் தருவேன் – கவி காளிதாஸ்:


2000ம் ஆண்டு வெளியான உன்னைக் கொடு என்னைத் தருவேன் படம் அறிமுக இயக்குனர் கவி காளிதாஸ் இயக்கத்தில் வெளியானது.


தீனா – ஏ.ஆர்.முருகதாஸ்:


இந்திய திரையுலகில் இன்று முக்கிய இயக்குனராக உலா வரும் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் தீனா. அஜித் நடிப்பில் உருவான இந்த படத்தில்தான் அவருக்கு தல என்று அழைக்கத் தொடங்கினர். அதன்பின்பு அவரின் நிரந்தர அடையாளமாக அது மாறிவிட்டது.


சிட்டிசன் – சரவணன் சுப்பையா:


2001ம் ஆண்டு வெளியான சிட்டிசன் படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாகும். ஜனரஞ்சகமான கதையில் அஜித்தின் மாறுபட்ட நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இந்த படத்தின் மூலமாக இயக்குனராக சரவணன் சுப்பையா கோலிவுட்டில் கால் தடம் பதித்தார்.


ரெட் – சிங்கம்புலி:


ராம் சத்யா என்ற பெயரில் நடிகர் சிங்கம்புலி  இயக்குனராக அறிமுகமான படம் ரெட், இந்த படத்தில் அஜித்தின் கெட்டப்பும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இருந்தாலும் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை பெறவில்லை.


என்னைத் தாலாட்ட வருவாளா – கே.எஸ்.ரவீந்திரன்:


அறிமுக இயக்குனர் கே.எஸ்.ரவீந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான காதல் படம் என்னைத் தாலாட்ட வருவாளா.


ஆழ்வார் – செல்லா:


அஜித் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆழ்வார். இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் செல்லா. இவரே பின்னாளில் செல்லா அய்யாவு என்ற பெயரில் கட்டா குஸ்தி படத்தை இயக்கியிருப்பார்.


கிரீடம் – ஏ.எல்.விஜய்:


மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் போன்ற நல்ல தரமான படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் கிரீடம். 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான இந்த படம் குடும்ப பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும். படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதிலும், படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.


பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரையில் சாதாரண நடிகராக இருக்கும்போது அறிமுக இயக்குனராக வாய்ப்பு அளிக்கும் நடிகர்கள், உச்ச நட்சத்திரம் அந்தஸ்தை அடைந்த பிறகு போதியளவு வாய்ப்பு தர தயங்குவார்கள். ஆனால், அஜித் உச்ச நட்சத்திரம் அந்தஸ்த்தை அடைந்த பிறகும் தொடர்ந்து அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கினார்.


ஆனால், சிட்டிசனுக்கு பிறகு அவர் அறிமுக இயக்குனர்களுக்கு வழங்கிய வாய்ப்பு அவரது திரை வாழ்க்கையில் பெரிய சறுக்கலை ஏற்படுத்த தொடங்கியதால் கிரீடம் படத்திற்கு பிறகு அவர் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது.