திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களின் குழந்தைகள் பெரும்பாலும் மீடியாவின் கவனத்திலேயே இருக்கிறார்கள். இருப்பினும், நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா,ஒரு சினிமா ஸ்டாரின் குழந்தை இயல்பான மற்றொரு பிள்ளையை விட நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறார். ஏனெனில் அவர்கள் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பே ஒரு "பெர்ஃபெக்ஷனிஸ்ட்" ஆக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்.
ஐஸ்வர்யா தனிப்பட்ட அளவில் ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ளார், அவர் தனது பத்தாண்டு கால சினிமா வாழ்க்கையில் இரண்டு தமிழ் படங்களையும் ஒரு ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார். அவர் 2012ல் 3 திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். இதில் அவரது முன்னாள் கணவர் தனுஷ் நடித்திருப்பார். இதன் பிறகு 2015ம் ஆண்டு வை ராஜா வை படத்தை இயக்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் நடன இயக்குனர்களின் சொல்லப்படாத கதைகளைக் கொண்ட சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.
அண்மையில் புதுடெல்லியில் நியூஸ்18 சேனலின் இந்தியாவின் அம்ரித் ரத்னா சம்மான் நிகழ்வின் முதல் பதிப்பில் பேசிய ஐஸ்வர்யா, ஒரு நடிகரின் குழந்தையாக இருப்பதன் மூலம் வரும் சலுகைகளைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அது தனக்கு உவப்பானதாக இல்லை என்றும் கூறினார்.
"ஒரு நடிகரின் குழந்தையாக இருப்பது மிகப்பெரிய சவால். நடிகர்களின் குழந்தைகளுக்கு இது எளிதானது மற்றும் அவர்கள் எல்லாவற்றையும் ஈசியாகப் பெறுவார்கள் என்ற கருத்தை பொதுவாக மக்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எதிர்மாறானது. அது மிகவும் சவாலானது, ஏனென்றால் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும். நாம் தவறு செய்ய முடியாது. நாம் உண்மையில் தவறு செய்யக் கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் தவறு செய்து தப்பிப்பது எளிது. ஆனால் நாம் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, நீங்கள் அதே துறையில் இருக்க விரும்பினால், ஒரு நடிகரின் குழந்தையாக இருப்பது மிகவும் சவாலானது என்று நான் நினைக்கிறேன். எங்களைச் சுற்றி நாங்கள் சாதிக்க வேண்டும், வளர வேண்டும் என்று விரும்பும் நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நம் பெற்றோரை நேசிப்பதால் அவர்கள் எங்களை தங்கள் சொந்த வீட்டு குழந்தைகளாகப் பார்க்கிறார்கள். எனவே இவற்றையெல்லாம் நாம் எண்ணி சரியான சிந்தனையுடன் சவால்களை ஏற்று முன்னேற வேண்டியிருக்கிறது,” என்று ஐஸ்வர்யா கூறினார்.