லால் சலாம்


3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்து வை ராஜா வை படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். விஷ்ணு விஷால் , விக்ராந்த், உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .


ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப் பட்டிருக்கும் லால் சலாம் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம்


வரும் பொங்கல் திருவிழாவின் போது தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான்  ஆகியப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களுடன் வெளியாக இருந்த லால் சலாம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 26 ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் திரைப்படமும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


பிளானை மாற்றிய லைகா






லால் சலாம் படத்தை வெளியிட முடியாத காரணத்தினால் லைகா புரொடக்‌ஷன்ஸ் அதே நாளில் தனது தயாரிப்பில் வேறு ஒரு படத்தை களமிறக்க முடிவு செய்துள்ளது. அருண் விஜய் , எமி ஜாக்ஸன் , நிமிஷா சஜயன் ஆகியவர்கள் நடித்து ஏ.எல் விஜய் இயக்கியுள்ள மிஷன் படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறது லைகா நிறுவனம் . ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


என்ன காரணம்


லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவது தொடர்பாக லைகா புரொடக்‌ஷன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்களிடையே குழப்பம் தொடர்ந்து வருகிறது. மேலும் தனுஷ்  நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆவதால் தான் லால் சலாம் படம் வெளியாக வில்லை என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவந்தன. ஆனால் படம் வெளியாகததற்கு உண்மையான காரணம் இறுதிகட்ட வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே என்று கூறப்படுகிறது.