தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் கதாநாயகியாக முன்னேறி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக அமைந்தது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க.பெ. ரணசிங்கம்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், அரியநாச்சி என்ற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். அந்த நடிப்புக்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றதோடு, விருதுகளையும் வென்றார்.
22 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன்
இந்த நிலையில், அந்தப் படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. க.பெ. ரணசிங்கம் படத்தில் நடித்தபோது தனக்கு வயது வெறும் 22 மட்டுமே என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதிலும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அந்த வயதில் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தனது நடிகை வாழ்க்கையில் முக்கியமான அனுபவமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் ஆரம்பத்தில் தனக்குள் சிறிய தயக்கம் இருந்ததாகவும், ஆனால் விஜய் சேதுபதி அளித்த ஊக்கமும் நம்பிக்கையும் காரணமாக முழு அர்ப்பணிப்புடன் அந்த வேடத்தில் நடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகருக்கு வயதை விட கதாபாத்திரத்தின் உணர்வுகள்தான் முக்கியம் என்பதை அந்த அனுபவம் தனக்குக் கற்றுக்கொடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
க.பெ.ரணசிங்கம் படம் பற்றி
இயக்குநர் பி. விருமாண்டி இயக்கிய க.பெ. ரணசிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்தது. முதலில் 2020 ஜனவரியில் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னணிப் பணிகள் தாமதமானது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது. இறுதியில் 2020 அக்டோபர் மாதம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியான இந்தப் படம், அதன் கதை, அரசியல் பேசும் திரைக்கதை மற்றும் குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்காக பரவலான பாராட்டைப் பெற்றது.
