வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிய ஏராளமான நடிகைகளின் மத்தியில் ஒரு தமிழ் பெண்ணாக அனைவருக்கும் சவால் விட்டு கலக்கிய ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படிப்பட்ட சவாலான கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக நடித்துவிட கூடிய திறமையான நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 34வது பிறந்தநாள் இன்று.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் வெரைட்டியான கதைகளை தேர்ந்து எடுத்து தனது தனித்துவத்தை நிரூபிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டாப் 5 படங்களை பார்க்கலாம் :
கனா :
தன்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என தீவிரமான ஆசையுடன் இருக்கும் கிராமத்து பெண் எப்படி தடைகளை எல்லாம் தாண்டி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்க்கும் ஒரு லட்சிய பெண்ணாக மாறுகிறார் என்ற கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக நடித்திருந்தார்.
க/பெ. ரணசிங்கம் :
வேலை நிமித்தமாக துபாய்க்கு சென்ற தன்னுடைய கணவன் அங்கே உயிரிழக்க, அவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வருவதில் இருந்த சிக்கலை எதிர்த்து போராடும் ஒரு சாமானிய பெண்ணாக தன்னால் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டு மீட்டு கொண்டு வரும் கதாபாத்திரமாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.
தி கிரேட் இந்தியன் கிச்சன்:
இந்திய குடும்பத்து பெண்கள் அன்றாட வாழ்வில் எப்படி ஒரு மிஷின் போல சுழல்கிறார்கள் என்பதை புதுமண பெண்ணாக அனுபவிக்கும் போது அதை தன்னுடைய உணர்ச்சிகரமான முகபாவனைகளின் மூலம் அச்சு அசலாக வெளிக்காட்டி அந்த கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாக நியாயம் செய்து இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நம்ம வீட்டு பிள்ளை :
அண்ணன் - தங்கை இடையே இருக்கும் உன்னதமான உறவினை பாசமலர் படத்திற்கு பிறகு படமாக்கி இருந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை தாயுமான தமயன் சிவகார்த்திகேயன் தங்கை துளசியாக அண்ணன் மீது அளவு கடந்த அன்பை பொழிவதும், கணவனுக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கி தவிக்கும் போதும், அவமதிக்கப்படும் இடங்களில் பொறுமையாக பொறுத்து கொள்ளும் இடங்களில் ஸ்கோர் செய்து தூள் கிளப்பி இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
காக்கா முட்டை :
திரைத்துறையில் அடியெடுத்து வைத்த சமயத்தில் இரு மகன்களுக்கு தாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு கதாநாயகியும் தயங்கும் போது அதை துணிச்சலாக ஏற்று நடித்து திரையுலகத்தில் ஒட்டுமொத்த பாராட்டையும் குவித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுவே அவரின் திரைப்பயணத்திற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்த படங்களை தவிர ரம்மி, ஆறாது சினம், தர்மதுரை, வட சென்னை, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா என ஏராளமான திரைப்படங்களில் தனது தனித்துமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!