ஐஷ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர்.
மகள் பிறந்தநாள்
திரைத்துரையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒருவரை ஒருவர் ஆதரித்து வரும் தம்பதி ஐஷ்வர்யா மற்றும் அபிஷேக். ஐஷ்வர்யா ராய் குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் கூறிய இந்த வரிகள் அவர்களின் 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை மிகச் சிறப்பாக பிரதிபலிக்கக் கூடியவை "நான் அவரை பல சமயங்களில் கவனித்துள்ளேன், அவர் தனது வாழ்க்கையின் கடினமான காலங்களை மிகுந்த கண்ணியத்துடனும் கருணையுடனும் சாமர்த்தியமாக கடந்து வந்துள்ளார். நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்கள் மெல்லிய உணர்வு கொண்டவர்கள், நாங்கள் மிக மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். சில சமயங்களில் நாங்கள் கோபமாக திட்டுவோம், நாங்கள் அதிகமாக கோபம் கொண்டு வெடிக்கிறோம்… ஆனால், ஒருநாளும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை." என்றார்.
இந்நிலையில் இந்த தம்பதியினரின் மகளான ஆராத்யா பச்சன் இன்று தன்னுடை 12-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன்னுடைய மகளின் பிறந்தநாளுக்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஷ்வர்யா பச்சன். இதனைத் தொடர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.