தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தை அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நினைவுக் கூர்ந்துள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்ப்போம். பல மொழி படங்களும் அதில் இருக்கும். அதனால் தியேட்டர் கட்டலாம் என வீட்டில் ஐடியா சொன்னார்கள். அதற்கான பணியை நான் வில்லிவாக்கத்தில் மேற்கொண்டிருந்தேன். அதேசமயம் தான் அப்பா கல்பாத்தி அகோரம் திருட்டுப்பயலே படத்தை முதன்முதலாக தயாரித்தார். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம் உருவானது. அப்போது மினிமம் கேரண்டி அடிப்படையில் தான் படம் தருவார்கள். நாங்கள் போய் கேட்டால் உங்களை நம்பி எப்படி படம் தர முடியும் என கேட்டார்கள்.
இதனால் ஷாரூக்கான் நடித்த ரா ஒன் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் ரூ.25 லட்சம் கொடுத்து வாங்கினேன். அந்த படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் சினிமாவில் 5 ஸ்கிரீனில் படம் ஓடியது. பாப்கார்ன் விற்று தான் செலவழித்த பணத்தை ஓரளவு பெற்று சமாளிக்க முடிந்தது. அந்த நேரத்தில் தான் களவாணி படம் வெளியாகியிருந்தது. பலரும் வந்து அந்த படத்துக்காக டிக்கெட் கேட்டார்கள். அதன்பிறகே நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்து எந்த படத்துக்கு எத்தனை காட்சிகள் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன். வீட்டில் யாருக்குமே தியேட்டர் பிசினஸ் தெரியாது. என்னுடைய முயற்சி தான் அது.
நான் அந்த சமயத்தில் ஒவ்வொரு படமும் செய்யும் வசூல் தொடங்கி அனைத்து தரவுகளையும் பதிவு செய்வேன். அப்படியாக அப்பா பட விநியோகஸ்தராக களமிறங்கும்போது அந்த தரவுகளை பயன்படுத்திக் கொண்டார். என் ஒரு தியேட்டரில் இவ்வளவு கலெக்ஷன் வருகிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் வசூல் எப்படி வருகிறது என்பதை கணக்கிடுவேன். அவர்களை எங்களுடைய போட்டியாளர் என்று நினைப்பேன். இதில் சத்யம் தியேட்டர் கலெக்ஷனை அடித்துக் கொள்ளவே முடியாது. அதற்கு காரணம் அவர்கள் ஒரு படத்தை ஒரு வாரமானாலும் மாற்ற மாட்டார்கள். ஆனால் நான் எல்லா படத்தையும் முதல் நாள் பார்த்து விட்டு அதற்கேற்ப காட்சிகளை மாற்றி விடுவேன்.
Also Read: Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
அதாவது எது பெரிய ஸ்கிரீன், சின்ன ஸ்கிரீனில் என்பதை நான் முடிவு செய்வேன். கிட்டதட்ட 10 ஆண்டுகள் நான் அதைத்தான் செய்து வந்தேன். இதில் எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை வருவோம். அவர் நிறைய படம் ஆசையோடு எடுப்பார். ஆனால் தியேட்டரில் பல காரணங்களால் படத்தை எங்கள் படமாக இருந்தாலும் தூக்கி விடுவதை விமர்சிப்பார். இதன்பின்னர் என்னை பட விநியோகஸ்தராக கொண்டு வந்தார். ஆனால் நான் எக்காரணம் தயாரிப்பாளராக வரமாட்டேன் என சொல்லி வந்த நிலையில் பிகில் படம் மூலம் அதுவும் நடந்தது” என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
