நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.


அகிலன்:


நடிகர் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகிலன்’. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டெர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக் ஜெயம் ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கியுள்ளார்.


கடல் சார்ந்த பகுதிகளையும் துறைமுகத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , கடலில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கலால், இப்படத்தின் ரிலீஸ்  தொடர்ந்து தள்ளிப்போனதாக முன்னதாகத் தகவல்கள் வந்தன.


மார்ச் 10 ரிலீஸ்:


கடந்தாண்டே இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மற்றொருபுறம் பொன்னியின் செல்வன் ரிலீசுக்குப் பிறகு பான் இந்தியா ரசிகர்களைக் கவர்ந்த ஜெயம் ரவி தன் படங்களையும் கதாபாத்திரங்களையும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார்.


இந்நிலையில், அகிலன் படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இறைவன் பர்ஸ்ட் லுக்:


முன்னதாக என்றென்றும் புன்னகை,மனிதன் படங்களின் இயக்குநர் ஐ.அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில்  இறைவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி மாதம் வெளியாகி கவனமீர்த்துள்ளது. 


தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி - நயன்தாரா கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் ஒன்றிணையும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். முன்னதாக படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்ற நிலையில் இறைவன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனமீர்த்தது. இந்நிலையில், இப்படமும் மார்ச் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்கள் மகிழ்ச்சி:


மற்றொரு புறம் பொன்னியின் செல்வன் 2 படமும் சம்மர் ரிலீசாக வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்த நிலையில், அடுத்தடுத்து ஜெயம் ரவி படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களை மகிழ்விக்க உள்ளன.


மேலும் தன் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்துக்கான பணிகளிலும் ஜெயம் ரவி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இந்த ஆண்டு வரிசைக்கட்டி வரும் அவரது படங்களைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.