பிரம்மாஸ்திரா பாகம் 2 யில் நடிகர் விஜய்தேவரகொண்டாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம்  “பிரம்மாஸ்திரா”. சுமார் 410 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப்படம், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தப்படத்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.


இருப்பினும் படக்குழு சார்பில் இருந்து படம் நல்ல வரவேற்பையே பெற்று வருவதாக கூறி, வசூல் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் படத்தின் இயக்குநர் அயர்ன் முகர்ஜி பிரம்மாஸ்திரா திரைப்படம் உலக அளவில் 420 கோடி வசூல் செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 4 ஆம் தேதி பிரம்மாஸ்திரா திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளஸ் -ல் வெளியானது.






படத்தை 3 பாகமாக வெளியிட திட்டமிட்டு இருக்கும் இந்தப்படத்தின் இராண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் படக்குழு தற்போது மும்மரமாக ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் முதல்பாகத்தில் ரன்பீர் கபூர் நடித்த சிவா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யஷ், ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், யாரும் படத்தில் ஒப்பந்தமாக வில்லை என்று தெரிகிறது. இதனால், படக்குழு நடிகர் விஜய்தேவரகொண்டாவை அணுகி இருக்கிறனர். 






இது குறித்து பாலிவுட் ஹங்கமா வெளியிட்டு இருக்கும் செய்தியில் “ பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோகரின் தர்மா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பிரம்மஸ்திரா 2 ஆம் பாகத்தில் யஷ், ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கரண் ஜோகர் விஜயை சிவா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார். காரணம் இருவரும் முன்னதாக லைகர் படத்தில் இணைந்து பணியாற்றிய காரணத்தால், இருவருடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. அதன் காரணமாக கரண் ஜோகர் விஜயுடனே பணியாற்ற விரும்புவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது.