ப்ரபாஸ் நடிப்பில் மாபெரும் செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். வாரத்திற்கு ஒருமுறை இந்தப் படம் குறித்தான ஏதாவது ஒரு அப்டேட் வந்துகொண்டுதான் இருக்கிறது. உண்மையில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு முறையும் எந்த ஒரு அப்டேட் வந்தாலும் அதனை பகடி செய்யும் போக்குதான் அதிகம் காணப்படுகிறது. அதேபோல் ப்ரபாஸின் அதிக எதிர்ப்பார்க்கப்படும் படம் என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையில் படம் வெளியாகும் தேதி அறிவிப்பதில் சில காலம் குழப்பம் நீடித்து வந்தது. ஆனால் அவ்வப்போது போஸ்டர்கள் மற்றும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆதிபுருஷ் திரைப்படம் சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆதிபுருஷின் டீஸர் வெளியானபோது அதன் சிஜி மிக மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். பின் படத்தின் சிஜி வேலைகள் திருத்தங்கள் செய்யப்பட்டு அண்மையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. டீசரைக் காட்டிலும் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஒரு பாடலும் வெளியிடப்பட்டது. தற்போது இன்று ஆதிபுருஷ் திரைப்படத்தில் இரண்டாம் பாடல் வெளியிடப் பட்டிருக்கிறது.
மேலும் அடுத்த மாதம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஆதிபுருஷ் ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் 160 முதல் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்தை வியாபாரம் செய்திருக்கிறது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டால் திரையரங்களில் வெளியாவதற்கு முன்பே அதிக வியாபாரம் சம்பாரித்த தெலுங்குப் படங்களில் சாதனை படைக்கக் கூடியதாக இருக்கும் ஆதிபுருஷ்.
ஆதி புருஷ் படத்தைத் தொடர்ந்து ப்ரபாஸ் கே ஜி எஃப் திரைப்பட இயக்குனர் ப்ரஷாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார். பின் நாக் அஷ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க இருக்கிறார் ப்ரபாஸ். தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் ப்ரபாஸ்.
பாகுபலிப் படத்திற்குப் பின் குறிப்பிடத் தகுந்த வெற்றிப்படம் எதுவும் ப்ரபாஸ் நடிக்கவில்லை. பான் இந்திய படமாக வெளியான சாஹா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி கடுமையான விமர்சனங்களையே எதிர்கொண்டது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் இந்திய அளவில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி ப்ரபாஸின் கரீயரை தீர்மானிக்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.