இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.200 கோடியை கடந்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


விமர்சனங்களை சந்தித்த ஆதிபுருஷ்


வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் ஓம் ராவத்  இயக்கியுள்ள ’ஆதிபுருஷ்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.500 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது.


இதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மட்டும் டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. மற்ற மொழிகளில் லட்சக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இதற்கிடையில் கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் டீசரும், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளை சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்தனர். 


ரசிகர்களை சோதித்த படம் 


14 ஆண்டுகளை வனத்தில் கழிக்கும் வனவாச காலத்தில் சீதையை தங்க மான் மூலம்இலங்கைக்கு கடத்தி செல்கிறான் ராவணன். ஜடாயு எனும் கழுகு சீதையை மீட்க முயற்சி எடுத்தும் அது பலிக்காமல் போகிறது. தொடர்ந்து அடையாளத்திற்காக விட்டுச்செல்லும் சீதையின் முத்துமாலை வானரர்களிடம் கிடைக்கிறது. மறுபக்கம் சீதையை மீட்க தெரியாமல் விழிக்கும் ராமனுக்கு சுக்கிரீவனிடம் செல்ல வேண்டும் என்று சாப முக்தி பெறும் பெண் ஒருவள் சொல்கிறாள். இதை வைத்து ராமன் ஹனுமனை சந்தித்து, சீதையை மீட்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.  ஊருக்கே தெரிந்த கதையை, ஓம் ராவத்  நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி  இந்த படத்தை வித்தியாசமாக கொடுத்திருந்தார். 


ஆனால் படம் ரசிகர்களை கவரவில்லை. சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆதிபுருஷ் உலகம் முழுவதும் முதல் நாளிலேயே ரூ.140 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்நிலையில் 2 ஆம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும்  இரண்டாம் நாளில் ஆதிபுருஷ் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தி மொழியில் ரூ.37 கோடி வசூல் கிடைத்துள்ளது. மொத்தமாக உலக அளவில் ரூ.240 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.