கல்லூரி காலத்தில் பேருந்து நிறுத்தத்தில் புகை பிடிப்பவர்கள் அருகில் தான் அமர்ந்திருப்பேன் என நடிகை வித்யா பாலன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பாலன், சிறுவயதில் இருந்து மும்பையில் வளர்ந்தவர். தமிழ் திரையுலகம் புறக்கணித்த மிக திறமையான நடிகைகளில் ஒருவர். இவரை பாலிவுட் திரையுலகம் அங்கீகரித்தது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2011 ஆம் ஆண்டு தி டர்ட்டி பிக்சர் படம் வெளியானது. இப்படத்தில் சில்க் கேரக்டரில் நடித்து தேசிய விருது வென்றதோடு, தான் எப்பேர்பட்ட திறமை உள்ள நடிகை என்பதை தமிழ் திரையுலகிற்கு தெரியப்படுத்தினார். இதன்பிறகு 2018 ஆம் ஆண்டு அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய வித்யா பாலன் தன்னுடைய புகைப்பிடிக்கும் பழக்கம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “நான் புகைப்பிடிப்பதை ரசிப்பவள். சிகரெட் மட்டும் உடலுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால் நான் புகை பிடிப்பவளாக மாறியிருப்பேன். காரணம் நான் அந்த வாசனையை விரும்புகிறேன். கல்லூரி காலத்தில் பேருந்து நிறுத்தத்தில் புகை பிடிப்பவர்கள் அருகில் தான் அமர்ந்திருப்பேன். தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த பிறகு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 3 சிகரெட் பிடிப்பதை வழக்கமாக்கி கொண்டேன். அந்த படத்தில் நடித்த பிறகு தான் புகை பிடிக்கும் அதீத ஆர்வம் ஏற்பட்டது. தி டர்ட்டி பிக்சர் படத்துக்காக என்னை அணுகிய போது எனக்கு புகை பிடிக்க தெரியும். அதனால் அந்த கேரக்டரில் என்னால் போலியாக நடிக்காமல் தயங்காமல் நடித்தேன். காரணம் அந்த நேரத்தில் பெண்கள் புகைப்பிடிப்பது பற்றி சில எதிர்க்கருத்துகள் இருந்தது” என வித்யா பாலன் கூறியிருந்தார்.
இதேபோல் ஆடை பற்றி வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “எனக்கு ஃபேஷன் என்ற ஒன்று புரியவில்லை. நான் யாரையும் மகிழ்விக்க உடை அணிவதில்லை. எனக்கு வயது ஏற ஏற இதுபோன்ற ஆடைகள் அணிவது வசதியாக இருப்பதாக நினைக்கிறேன். நாகரீகமாக இருக்கும் என்பதற்காக எனக்கு பிடிக்காத உடையை அணிவதில்லை. அப்படி அணிந்தால் நான் மூச்சுத்திணறுவதாக உணர்கிறேன் எனவும் வித்யா பாலன் கூறியுள்ளார்.