படிக்கும்பொழுதே நடிக்க வந்த நடிகைகளுள் ஒருவர்தான் நடிகை விசித்திரா. சைக்காலஜியில் பட்டம் பெற்ற விசித்திரா தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி என  100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லியாகவும் , காமெடி நடிகையாகவும் நடித்திருக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரமாகவே இருந்தாலும் கூட விசித்திராவிற்கு வந்தது எல்லாமே கிளாமர் கலந்த ரோல்ஸ்தான் . இதனால் இவர் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தப்பட்டார். கிளாமர் தனது திருமண வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என ஷகிலா உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் விசித்ரா.




அதில் "பீக்ல இருந்த சமயத்துலதான்  நான் திருமணம் செய்துக்கொண்டு திரைத்துறையை விட்டு வெளியேறினேன். என் கணவரை முதன் முதலாக நான் பாலக்காட்டில்தான் பார்த்தேன். அவர் என்னை நடிகையாக பார்க்காமல் எனது உண்மையான கேரக்டரை ரசித்தார்.இருவருக்கும் பிடித்து திருமணம் செய்துக்கொண்டேன் . திருமணத்திற்கு முன்னதாகவே நல்ல கேரக்டர் வந்தால் நான் சினிமாவில் நடிப்பேன் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் எனது சினிமா புகழ் அவருக்கு ரொம்ப ஹைப்பை ஏற்படுத்திருச்சு.


அதனால அவருடைய சொந்தங்கள் மத்தியில் கணவருக்கு ரொம்ப அழுத்தம்.  என்னை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வேறு. காதலிக்கும் பொழுது வேறு மாதிரியாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு வேறு மாதிரியாக இருந்தது.  திருமணமான 3 வது நாளிலேயே நான் சொன்னேன் , உங்களுக்கு என்னை திருமணம் செய்தது பிரச்சனையாக இருந்தால்  விட்டுட்டு போங்க , எனக்கு பிரச்சனையே இல்லை அப்படினு. ஆனால் அவர் யோசித்து இல்லை நாம வாழலாம் அப்படினு சொன்னாரு. ஆனால் திருமணம் ஆன முதல் வருடம் எனக்கு முள்மேல நடக்குற மாதிரி இருந்தது.


எனக்கு என் கணவர் ஹாப்பியா இருக்கனும்னு தோணுச்சு . அதனால இந்த கெரியரை விட்டுட்டு போனேன். எல்லா நடிகைகளுக்குமே இருக்க எண்ணம் , நமக்கு சரியான மாப்பிள்ளை கிடைப்பாங்களா... கிடைத்தாலும் கடைசி வரைக்கும் நம்ம கூட இருப்பாங்களா ...நம்புவாங்களானு எப்போதுமே ஒரு மனநிலை இருக்கும். இந்திய ஆண்கள் மனநிலை எப்போதுமே இப்படியானதுதான். அந்த சமயத்தில் நாம கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போக வேண்டியிருக்கிறது. நான் படிச்ச பொண்ணு , சினிமா எல்லாத்தையும் விட்டுட்டு குடும்பத்திற்காக மாறுவது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. குழந்தைகளுக்கு நான் நடிகைனே சொல்லவில்லை. அவங்க நண்பர்கள் சொல்லித்தான் அவங்களுக்கு தெரியும்.


எனக்கு ஏற்ற மாதிரியான ரோல்கள் கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்லை. சரியாக பயன்படுத்தப்படாத  நடிகைகள்ல நானும் ஒருத்தி. பசங்க யூடியூப் , இணையதளம் வாயிலாக நிறைய கிளாமர் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். நான் பண்ணியது எல்லாம் கிளாமரே கிடையாது. ஆனாலும் படத்தில் நான் நடித்த  பழைய வீடியோவை  சிலர் பார்ன் சைட்டுல போட்டுருக்காங்க. அதுதான் எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. ரொம்ப கஷ்டமாகவும் இருந்துச்சு. அதை எப்படி தடுக்குறதுனு கூட எனக்கு தெரியவில்லை ” என தனது சிரமங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை விசித்திரா.