நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு பின் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் இருப்பதாக வெளியாகும் செய்திக்கு வரலட்சுமி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முக்கிய ட்விஸ்டாக யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இந்த அறிவிப்பு அந்த கட்சி நிர்வாகிகளிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் நடிகர் சரத்குமார் அவரது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கு பின்னால் அவரது மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனை மறுக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், “நமது திறமையான ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அன்பான பத்திரிக்கையாளர்களே, குறிப்பாக சுயமாக அறிவித்துக்கொள்ளும் செய்தித் தளங்கள் ஏன் உண்மையான செய்தியை ஒளிபரப்பக்கூடாது! பிரபலங்களிடம் இருக்கும் குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள், நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். நாட்டில் 1000 பிரச்சனைகள் உள்ளது அதில் கவனம் செலுத்துங்கள். நமது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகள் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். மேலும் எங்களைப் பெருமைப்படுத்தும் பத்திரிகையை மீண்டும் கொண்டு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடற்கரை பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 300 கிலோ போதைப் பொருள், துப்பாக்கிகள் ஆகியவற்றை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக முதலில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் மேலாளர் ஆதிலிங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சம்மன் அனுப்பப்படவில்லை என நடிகை வரலட்சுமி மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். இது போன்ற சூழலில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மகளின் பெயர் அடிப்பட்டதால் இந்த நடவடிக்கை சரத்குமார் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.