பாலியல் சர்ச்சையில் சிக்கும் மலையாள நடிகர்கள்


மீடூ இயக்கத்திற்குப் பிறகு அடுத்தபடியாக மலையாள சினிமாத் துறையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரள அரசு நீதிபதி ஹேமா தலைமையில் இந்த கமிட்டியை உருவாக்கியது. பல்வேறு நடிகைகளின் வாக்குமூலங்களைப் பெற்று சமர்பிக்கப்பட்ட இந்த அறிக்கை பல வருடங்களாக கிடப்பில் இருந்தது. தற்போது கடும் அழுத்தத்தம் கொடுக்கப்பட்ட பின் இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் நீங்கலாக பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு பிரபல மலையாள நடிகர்கள்,இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மேலும் நடிகை மினு மூனீர் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் பிரபல மலையாள நடிகரான ஜெயசூர்யா , சித்திக் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்கள். மலையாள திரையுலகைச் சேர்ந்த 17 ஆண்களின் மேல் இதுவரை புகார்கள் பதிவாகியுள்ளன. 


இதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட அவரது குழுவில் இருந்த 17 நபர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் ‘மூத்த நடிகர்களால் சினிமாவை முழுமையாக நிர்வகிக்க முடியவில்லை என்றும் சினிமாத் துறையினர் ஒன்றுசேர்ந்து பாலியல் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசியதைத் தொடர்ந்து மோகன்லால் தனது பதவிய ராஜினாமா செய்தது குறிப்பிடத் தக்கது. 


நடிகை ஊர்வசி கருத்து


மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது குறித்து நடிகை ஊர்வசி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறை மட்டுமில்லாமல், கோலிவுட் , பாலிவுட் திரைத்துறையிலும் சினிமா தவிர்த்து மற்ற துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்து வருவதாகவும் நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். தங்களுக்கு நிகழ்ந்தது இன்னொரு பெண்ணிற்கு நடக்க கூடாது என்பதற்காக மலையாள நடிகைகள் துணிவாக முன்வந்து பேசியிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். 


தான் நடிக்க வந்த காலத்திலேயே தன்னுடைய சீனியர் நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை இருந்து வந்ததாகவும் இனிமேல் பெண்கள் படப்பிடிப்பிற்கு தங்களுடன் துணைக்கு ஒரு நபரை கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.