தமிழில் 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவே அதிக அளவில் ஹிந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் டாப்ஸி. தமிழில் ஆடுகளம் தவிர்த்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, கேம் ஓவர், வந்தான் வென்றான், ஆர்யாவிற்கு ஜோடியாக ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது  ஜெயம் ரவியுடன் ’ஜனகனமன’ படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர ‘சபாஷ் மித்து ‘ என்ற பெயரில் உருவாகிவரும் கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.  டாப்ஸி நடிப்பில்  சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில்  வெளியான ”ஹஸ்ஸின் தில்ரூபா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.


 



இதனை தொடர்ந்து  பிரபல தெலுங்கு  இயக்குநர் ஸ்வரூப் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில்  டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மிஷன் இம்பாசிபிள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கதைக்களம் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில்  ‘மிஷன் இம்பாசிபிள்’ படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. படமானது தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் டப் செய்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த டாப்ஸி சினிமா துறையில் உள்ள மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் “ எல்லா துறைகளிலும் போட்டியும் மன அழுத்தமும் இருக்கிறது. ஆனால் எங்களை போன்ற சினிமா துறையினருக்கு அது கேமராவின் முன்பாகவே உள்ளது. உலகம் பார்க்க இருப்பதால் சற்று மன அழுத்தம் கூடுதலாகிவிடுகிறது. மக்கள் எங்களிடம் காட்டும் விலை மதிப்பற்ற அன்பிற்கு நாங்கள் கொடுக்கும் விலையாகத்தான் அதனை பார்க்கிறோம். உலக மக்கள் நடிகர்களை  அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எல்லோரும் கேமரா முன்பு வருகின்றனர். இதில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சினிமா தேர்வு அவரவரின் சொந்த விருப்பம் . எனவே போட்டியையும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.இது போல பல இடங்களில் தனது வெளிப்படையான மற்றும் துணிச்சலான நிலைப்பாட்டால் ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார் டாப்ஸி.



முன்னதாக நடிகை கரீனா கபூர் , ராமாயண கதைகளை தழுவி எடுக்கப்படும் படம் ஒன்றில் சீதா கதாபாத்திரத்தில்  நடிக்க  அதிக சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியானது. இது பாலிவுட் வட்டாரத்தில்  சலசலப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் கரீனாவை கடுமையாக ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். இதனை கண்டித்து நடிகை டாப்ஸி குரல் கொடுத்திருந்தார். அதில் “ ஒரு ஆண் இந்த அளவு சம்பளத்தை உயர்த்தியிருந்தால் அவருக்கு மார்கெட் உள்ளது என்பார்கள், அதுவே ஒரு பெண் கேட்டால் அவரை தகாத வார்த்தைகளில் திட்டுவது வழக்கமாகிவிட்டது. கரீனா இந்தியாவின் முன்னணி நடிகையுள் ஒருவர், அவருக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் அவர்  சம்பளத்தை உயர்த்தி  கேட்பதில் என்ன தவறு “ என காட்டமாக தெரிவித்திருந்தார் டாப்ஸி என்பதும் குறிப்பிடத்தக்கது.