திரையுலகில் குறைந்த காலகட்டமே பயணித்தாலும் ரசிகர்கள் மனதில்  இன்று வரை நினைவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சௌந்தர்யா. அவரின் பிறந்த தினம் இன்று.  


கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான எழுத்தாளராகவும் தயரிப்பாளராகவும் விளங்கிய கே.எஸ்.சத்தியநாராயணாவின் மகள் தான் சௌந்தர்யா. அவரின் இயற்பெயர் சௌமியா என்றாலும் அனைவரும் அவரை முன்னா என்றே செல்லமாக அழைத்தனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் மற்றவர்களோடு பழகும் போது கூட கவனமாகவே இருப்பாராம். அதனால் அவருக்கு மிக சிறிய நட்பு வட்டாரம் தான் இருந்துள்ளது.


 




சிறு வயதில் அவருக்கு ஒரு டாக்டராக வேண்டும் என்பது தான் கனவாக இருந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்ற போது அங்கே மருத்துவர் செய்யும் வேலைகளை பார்த்து தானும் அதே போல ஒரு டாக்டராகி மற்றவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார். ப்ரெண்ட்ஸ்களுடன் சேர்ந்து விளையாடும் போது கூட அப்பாவின் வெள்ளை சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு டாக்டர் போல ஊசி போட்டு விளையாடுவாராம்.


அப்பாவுடன் சேர்ந்து சில திரைப்பட விழாக்களுக்கு போகும் போது தான்  ஹம்சலேகா தன்னுடைய 'கந்தர்வா' படத்தில் நடிக்க சௌந்தர்யாவை அணுகியுள்ளார். அப்பாவையும் மகளையும் சமாதானம் செய்து சம்மதம் வாங்கியுள்ளார் ஹன்சாலேகா. அப்படி அவர் திரைக்கதை வசனம் எழுதிய படமான 'கந்தர்வா' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சௌந்தர்யா. அதை தொடர்ந்து உடனே 'பா நன்னா ப்ரீத்திசு' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் நடித்து முடித்துவிட்டு தன்னுடைய மருத்துவ கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார்.


 




தன்னுடைய எம்பிபிஎஸ் கனவை நினைவாக்க பெங்களூருவில் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் சினிமா வாய்ப்பு அவரை படிக்க விடவில்லை. கல்லூரிக்கே சென்று படப்பிடிப்புக்கு அழைத்து செல்லும் அளவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. அப்படி அவருக்கு அமைந்த பல வாய்ப்புகள் ஒன்று தான் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான 'பொன்னுமணி' திரைப்பட வாய்ப்பு. இப்படி நடிப்பிற்காகவே தன்னுடைய கல்லூரி முதலாம்  ஆண்டு படிப்பை ஒன்பது மாதத்தோடு நிறுத்திக்கொண்டார்.


தமிழில் முதல் படமான 'பொன்னுமணி' படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தெலுங்கு  மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினி, கமல், கார்த்திக், விஜயகாந்த், அர்ஜுன், பார்த்திபன் என தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். தமிழில் மதுமதி படம் தான் சௌந்தர்யா நடித்த கடைசி திரைப்படம். 


2004ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் இந்த எதிர்பாராத கொடூரமான இழப்பு திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் மிகவும் பாதித்தது. தற்போது அவர் உயிருடன் இருந்திருந்தால் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்து இருப்பார்.