தமிழ் சினிமாவில் புன்னகையால் ரசிகர்களை மயக்கிய புன்னகை அரசி கே.ஆர். விஜயா வரிசையில் அடுத்த தலைமுறையினரை சிரிப்பால் சிறை வைத்த நடிகை சினேகாவின் 42வது பிறந்தநாள். 


தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை சினேகா பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். தமிழகத்துக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்த பிறகு 'இங்கணே ஒரு நிலாபக்‌ஷி' மலையாள திரைப்படத்தின் மூலம் திரை பயணம் தொடங்கியது. தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படம் தான் முதலில் வெளியானது. முதல் படத்திலேயே நம்ம சொந்தக்கார பொண்ணு என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார். 


 



ஆனந்தம் படத்தில் குடும்ப பெண்ணாக பாந்தமான அழகால் ரசிகர்களை  கவர்ந்த சினேகாவின் 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்'  பாடல் அந்த ஆண்டில் வெளியான வெற்றிப்பாடல்களில் ஒன்றாகவும். அப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது. அடுத்தடுத்து சினேகா எடுத்து வைத்த ஒவ்வொரு முடியுமே வெற்றி படிகளாக தான் அமைந்தது. 


வெற்றி படிகளாய் அமைந்த படங்கள் :


இயக்குநர் சிகரத்தின் பார்த்தாலே பரவசம், கமல் ஜோடியாக "வசூல்ராஜா எம்பிபிஎஸ்", பம்மல்.கே.சம்பந்தம், சூர்யாவின் ஜோடியாக "உன்னை நினைத்து", விஜய் ஜோடியாக "வசீகரா", ஷ்யாம் ஜோடியாக "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க", ஸ்ரீகாந்த் ஜோடியாக 'ஏப்ரல் மாதத்தில்', சேரனின் "ஆட்டோகிராப்", "பிரிவோம் சந்திப்போம்" என எக்கச்சக்கமாக ஹிட் படங்கள் வரிசை கட்டின. பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அமைதியான இல்லத்தரசியாகவும், மாடர்ன் பெண்மணியாக நவீன சிந்தனை கொண்ட ஒரு பெண்ணாகவும் வெகு  சிறப்பாக வித்தியாசம் காட்டி நடித்திருந்தார்.   


 



வலுவான நாயகி :


அது மட்டுமின்றி அஜித், தனுஷ், அர்ஜுன், ஜீவன், சிம்பு, லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார். வலுவான நாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மிக சரியான வாய்ப்பாக அமைந்தது தங்கர்பச்சனின் "பள்ளிக்கூடம்" திரைப்படம். தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் சரிசமமாக பேலன்ஸ் செய்து நடித்து வந்தார். 


புதுப்பேட்டை, அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட படங்களில்  துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருமணம், குடும்பம் என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியான பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். அதற்கு பிறகு நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 


இமேஜுக்குள் அடக்கி கொள்ளாதவர் :


குடும்ப பாங்கான ஹீரோயின் கதாபாத்திரங்களில் பொருந்தி நடிக்க கூடிய சினேகா அந்த ஒரே இமேஜுக்குள் தன்னை அடக்கி கொள்ளாமல் சவாலான கதாபாத்திரங்களை கூட பார்வையாளர்கள் முகம் சுளிக்காதவாறு பார்த்துக்கொண்டார். அதற்கு ஒரு உதாரணம் தான் புதுப்பேட்டை படத்தில் அவர் நடித்த பாலியல் தொழிலாளி கதாபாத்திரம். 


முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தும் சினேகாவின் மதிப்பும் மரியாதையும் எந்த இடத்திலேயும்   குறைந்ததில்லை. சினேகா போன்ற ஒரு திறமையான நடிகைக்கு மென்மேலும் பல பல வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவரின் அழுத்தமான தடங்களை பதித்து, மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.