தமிழ் சினிமாவில் கே.ஆர் விஜயாவிற்கு பிறகு புன்னகை அரசி என கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா. 'என்னவளே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சினேகா, கமல் முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு நடிகையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சினேகா தற்போது ஒரு தொழிலதிபராக தனது பயணத்தை தொடங்க உள்ளார். 'சினேகாலயா சில்க்ஸ்' என்ற பெயரில் பட்டு துணிக்கடை ஒன்றை துவங்க உள்ளார். வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி, சென்னை தி. நகரில் உள்ள வெங்கடநாராயண தெருவில் அதன் திறப்பு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நடிகை சினேகாவின் கணவரும் நடிகருமான நடிகர் பிரசன்னா, தனது மனைவியின் இந்த புதிய தொடக்கத்திற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
"என் கண்ணம்மாவைக் கண்டு நான் சிலிர்ப்பாகவும் ஆவலாகவும் இருக்கிறேன். சினேகா இன்று ஒரு தொழிலதிபராக, தன்னுடைய நீண்ட நாள் கனவான சொந்த பட்டுப் புடவைக் கடை திறப்பை பெருமையுடன் அறிவிக்கும் இந்த தருணத்தில் என்னுடைய கண்ணம்மாவை மனதார வாழ்த்துகிறேன். நீ என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தில் இருந்ததையும் நான் உனக்காக செய்யும் நேரம் இது. என்றும் உனக்கு ஆதரவாக இருந்து உன்னை வாழ்த்துவேன். உன்னை நினைத்து பெருமையடைகிறேன்... லவ் யூ..." என அழகான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் பிரசன்னா. அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.