சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே தான் பான் இந்திய ஸ்டார் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.


ஸ்ருதி ஹாசன்


உலக நாயகனின் கமல்ஹாசன் மற்றும் சாரிகா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் கமல் இயக்கிய ‘ஹே ராம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பது மட்டுமில்லாமல் குழந்தையாக படங்களில் பாடியும் இருக்கிறார். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.


சமீபத்தில் பிரபாஸ் நடித்து வெளியான சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். நடிப்பு ஒரு பக்கம், சொந்தமாக ஆல்பம் வெளியிடுவது, காதல் வாழ்க்கை என பிஸியாக இருந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். கடந்த ஜவவரி 28ஆம் தேதி தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்ருதி ஹாசன்.


பான் இந்தியா 


சமீப காலங்களில் திரைப்படத் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை பான் இந்தியா. ஒரு படம் அல்லது ஒரு நடிகர் மொழிகளைக் கடந்து இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெறுவதை பான் இந்தியா என்று குறிப்பிடுகிறார்கள். பாகுபலி படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். கே.ஜி.எஃப் படத்தின் மூலம் நடிகர் யாஷ், தற்போது நடிகர் விஜய் சேதுபதி பான் இந்தியா ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இனிவரும் காலங்களில் எல்லா படங்களும் பான் இந்தியப் படங்களாக அடையாளப் படுத்தப்படும்  எண்ணத்தில் தான் எடுக்கப்படும் என்கிற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


ஒரு பக்கம் நடிகர்களுக்கு இப்படியான அடையாளம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சில நடிகர்கள் பான் இந்தியா என்கிற அடையாளத்தை மறுத்தும் வருகிறார்கள். ஒரு  நடிகர் அல்லது ஒரு சினிமா என்றாலே அது மொழிகளைக் கடந்து மக்களை சென்று சேரக் கூடியது தான். அப்படி இருக்கும் போது பான் இந்தியா என்று நடிகர்களையும் படங்களையும் தனியாக அடையாளப்படுத்துவது நடிகர்களின் எல்லைகளை சுருக்கவதே என்பது இவர்களின் வாதமாக இருக்கிறது. சமீப காலங்களில் நடிகர் விஜய் சேதுபதி தன்னை ஒரு பான் இந்திய நடிகர் என்று அடையாளப்படுத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார்.


 அப்போவே இதை சொல்லியிருக்கேன்


இந்நிலையில், இது தொடர்பாக பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேள்வி எழுப்பியபோது அவரது பதில் இதுவாக இருந்தது. “மற்ற நடிகர்களுடன் என்னை ஒப்பிடுவது எனக்குப் பிடிக்காது. நான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து தென் இந்திய மொழிகளில் நடித்து விட்டேன். மேலும் இந்தி படங்களிலும் நடித்துவிட்டேன். சமூக வலைதங்கள், ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பே நான் எல்லா மொழிகளிலும் நடித்துவிட்டேன். என்னுடைய பழைய நேர்காணல்களை எடுத்து பார்த்தால் நான் அப்போது பான் இந்தியா என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருப்பதைப் பார்க்கலாம்.” என்று அவர் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்