பள்ளி மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் பின்னாடியே ஏன் ஒருவர் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியாருக்கு எதிராக நடிகை ஷர்மிளா கேள்வி எழுப்பியுள்ளார். 


நேற்று முன் தினம் அரசு பேருந்தில் படிக்கட்டில் சென்ற பள்ளி மாணவர்களை நடிகையும், பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார் தாக்கியதுடன், பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு திட்டி அடித்தார். ரஞ்சனாவின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பள்ளி மாணவர்களை தாக்கியது, அரசு பேருந்தை வழிமறித்து நின்றது, அரசு பேருந்து ஓட்டுநரை பணி செய்யவிடாமல் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நேற்றுமாலை நிபந்தனை அடிப்படையில் ரஞ்சனா நாச்சியாருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அவர் காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. 


இந்த நிலையில் பாஜக நிர்வாகியான ரஞ்சனா நாச்சியாரின் நடவடிக்கை குறித்து நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா, மாணர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஏன் கேமராவுடன் செல்ல வேண்டும் என்றும், அதை வீடியோ எடுத்து ஏன் பிரபலமாக வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேசியுள்ள ஷர்மிளா, ”கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு ரஞ்சனா பேசியதாக கூறுகிறார்கள். அதேபோல் நானும் மணிப்பூர் சம்பவத்தில் உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் மோடியை பேசினால் ஏற்று கொள்வீர்களா..? சட்டத்துக்கு விரோதமான செயல்களை நியாயப்படுத்தவே பாஜக முயல்கிறது.


சட்டத்துக்கு விரோதமாக கொடிக்கம்பம் நடப்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுத்தால் மாநில தலைவர் 10 நாட்களில் 5000 கொடிகம்பம் நடுவோம் என சவடால் விடுகிறார். சட்டமன்ற உறுப்பினர்களை அறிவு இல்லை என அநாகரீகமாக பேசுகிறார். அவர்களுக்கு என்று வந்தால் எதை வேண்டாலும் நியாயப்படுத்துகிறார். 


ரஞ்சனா நாச்சியார் கண்டபடி அந்த மாணவர்களை அடிக்கிறார். அந்த மாணவர்களுக்கு ஏதாவது நடந்து இறந்து விட்டால் ரஞ்சனா என்ன பதில் சொல்வார்? அக்கறையில் செய்கிறேன் என்ற பெயரில் எதற்கு மாணவர்களை தாக்க வேண்டும்? அரசு பேருந்தில் ஏழை, எளிய மாணவர்கள்தான் செல்கிறார்கள். அவர்களை அடித்தால் கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் ரஞ்சனா இப்படி நடந்துள்ளார். திமுக அரசின் மீதான எதிர்மறை தாக்கம் ஏற்படுத்தவே இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தையே பாஜக செய்கிறது.


பாஜகவினர் அடித்தட்ட மட்டத்தில் இருந்து அரசியல் தலைவர்களின் மனைவி வரை அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி தான் வருகிறது. இந்த சூழல் இன்னும் தீவிரமடையும். 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலை ஒட்டியே பிளான் செய்து இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள். வடமாநிலங்களில் செய்யும் தேர்தல் ஸ்ட்ரேட்டஜியை தமிழகத்திலும் செய்கின்றனர்” என கேட்டு, பாஜகவுக்கு எதிராகவும், ரஞ்சனா நாச்சியாருக்கு எதிராகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.