நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் விஜய் - அஜித்தின் நட்பு குறித்து கேட்கப்பட்டது.
விஜய் - அஜித் நட்பு எப்படி?
அதற்கு பதிலளித்து கூறிய ஷாலினி கூறியதாவது, பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் (விஜய்யுடன்) ஒன்றாக பணியாற்றினோம். அவர்களும் ( விஜய்யும், அஜித்தும்) இணைந்து பணியாற்றினார்கள். நாங்கள் சந்தித்துக்கொண்டோம். குடும்பங்களாக சந்தித்துக் கொண்டோம். அவர்களது குழந்தைகள் வளர்வதை பார்த்துள்ளோம். எங்களது குழந்தைகளும் வளர்ந்துள்ளனர். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது.
இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இருவரைக் கண்டும் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். அது மிகவும் அழகானது. அவர் ( அஜித்) மிகவும் வேடிக்கையான மனிதர். அஜித் குழந்தைகளுடன் இருக்கும்போது மிகவும் வேடிக்கையாக இருப்பார். அஜித்தை உட்காரவைத்து அவரது முகத்தில் எங்கள் மகள் ஒப்பனை செய்துவிடுவார்.
அஜித்தின் சமையல் ரகசியம்:
அவர் குடும்பத்திற்காக மட்டும் பிரியாணி செய்துதரவில்லை. 6 அல்லது 7 முறை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி செய்துள்ளார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். யாராவது வந்தால் முதலில் உங்களுக்கு என்ன சமைக்க வேண்டும்? என்றுதான் கேட்பார். இது சாப்பிட்றேன், அது சாப்பிட்றேனு சொன்னா உடனே அவர் செய்து விடுவார். அடுத்தவர்களுக்கு சமைத்துக் கொடுப்பது அவருக்கு பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையில் மட்டுமே நடித்துள்ளனர். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவரும் திரையுலகின் இரு துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படுகின்றனர்.
ஆனால், திரைவாழ்வை கடந்து இவர்கள் நல்ல நண்பர்கள் என்று பலரும் தெரிவித்துள்ளனர். தற்போது, அதே கருத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார். ஷாலினி விஜய்யுடன் இணைந்து காதலுக்கு மரியாதை படத்திலும், அஜித்துடன் இணைந்து அமர்க்களம் படத்திலும் நடித்தனர்.
அமர்க்களம் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திற்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான ஜோடியாகவும் அஜித் - ஷாலினி உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி நடிப்பதை நிறுத்திவிட்டார். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷாலினி கதாநாயகியாக மலையாளத்தில் அறிமுகமானார்.
பின்னர், தமிழில் காதலுக்கு மரியாதை படம் மூலமாக அறிமுகமானார். தமிழில் விஜய், பிரசாந்த், அஜித், மாதவன் ஆகியோருடன் நடித்துள்ளார். தமிழில் மட்டும் காதலுக்கு மரியாதை,கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.