நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி ப்ரிவ்யூ ஷோ பார்த்ததாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தில் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் வெளியீடாக நாளை மறுநாள் (ஜனவரி 11) வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி வரைக்கும் பெரும்பாலான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
துணிவு படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின் ஸ்டைலிஷான அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் பிரமாண்ட கட் அவுட்கள், நலத்திட்ட உதவிகள் என துணிவு ரிலீசாகும் நாளை திருவிழாவாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி துணிவு படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்துள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தகவலறிந்து ஷாலினியை பார்க்க கூடிய ரசிகர்களிடம், படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன ஷாலினியே சொல்லிட்டாங்க.. அப்ப தியேட்டரில் நம்ம கொடி தான் பறக்கும் என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.