இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் கண்டுபிடித்த பொக்கிஷங்களில் ஒருவரான வெகுளித்தனமான கள்ளம் கபடமில்லாத திறமையான நடிகை சரிதாவின் 64வது பிறந்தநாள் இன்று. இன்று அவரை பற்றி பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். 


 


குண்டூர் மாவட்டத்தில் 1960ம் ஆண்டு பிறந்த சரிதாவின் இயற்பெயர் அபிலாஷா. பிரபல நடிகையும் தொழில் அதிபருமான விஜி சந்திரசேகர் சரிதாவின் சகோதரி ஆவார். 



8ம் வகுப்பு படிக்கும் போது கே. பாலசந்தர் நடத்திய ஆடிஷனில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 150 பேர் கலந்து கொண்ட அந்த ஆடிஷனில் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்த சரிதாவை தான் பாலச்சந்தர் தேர்ந்து எடுத்தார். 


 



கே. பாலச்சந்தர் சரிதாவை எப்போதுமே 'அறிவு கெட்ட முண்டம்' என்று தான் அழைப்பாராம். ஆனால் களிமண்ணை போல் இருந்த என்னை ஒரு நடிகையாக்கியவர் அவர் தான் என என்றுமே இயக்குநர் சிகரம் மீது மரியாதையும் நன்றிக்கடனும் கொண்டவர். 


கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 15 படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றவர் சரிதா. 


80ஸ் காலகட்டத்தில் 'திராவிட பேரழகி' என கொண்டாடப்பட்டவர் நடிகை சரிதா. 'சினிமா எக்ஸ்பிரஸ்' நடத்திய சிறந்த நடிகைக்கான போட்டியில் வாசகர்களின் அதிக வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். 


'தப்புத் தாளங்கள்' என்ற கன்னட படத்தில் தான் சரிதா முதன் முதலில் அறிமுகமானார். ரஜினிகாந்த் ஜோடியாக சரசு என்ற வில்லங்கமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். 


ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீவித்யா போல கண்களால் பேசக்கூடிய எக்ஸ்பிரஸிவ் கண்கள் உடைய நடிகைகளின் பட்டியலில் சரிதாவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 


 



இன்னசெண்ட் கலந்த மெச்சூரிட்டியான குரல் தான் சரிதாவின் தனிச்சிறப்பு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான விஜயசாந்தி, சுஷ்மிதா சென், சுஹாசினி, நக்மா, சௌந்தர்யா, நதியா, மீனா, ரோஜா, ராதிகா என பல நடிகைகளுக்கும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப செல்லமாக குரல் கொடுத்தவர். 


சரிதா தன்னுடைய 15 வது வயதிலேயே நடிகர் வெங்கட சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் 6 மாதங்களில் முறிந்தது. 


கருப்பாக குள்ளமாக குண்டாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்  கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்ததோடு சக நடிகைகளையும் பொறாமைப்பட செய்தவர். 


அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், மௌன கீதங்கள், அக்னி சாட்சி, கல்யாண அகதிகள், வண்டிச்சக்கரம், மங்கை ஒரு கங்கை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார். 


1988ம் நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஷ்ரவன், தேஜாஸ் என இரு மகன்கள் உள்ளனர். பின்னர் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். 


மகன்களுடன் துபாய் நாட்டிற்கு சென்று மகன்களை நன்றாக படிக்க வைத்து அவர்களுக்காகவே வாழ்ந்து வருகிறார். சரிதாவின் மூத்த மகன் ஷ்ரவன் டாக்டர் பட்டம் பெற்று மருத்துவராக உள்ளார். 2018ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கல்யாணம்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக பல ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார் சரிதா. 


விவசாய பூமியின் நிலையையும், தண்ணீரின் அவசியத்தையும் பற்றி வலியோடு 'தண்ணீர் தண்ணீர்' படத்தில் நடித்த செவ்வந்தி சரிதாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.