1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. நடிகர் பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அதன்பின் 8 ஆண்டுகள் சினிமாவுக்கு இடைவெளி விட்டார். மீண்டும் 2003 ஆம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சரண்யா இம்முறை அம்மா கேரக்டரிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். ராம், எம்டன் மகன், தவமாய் தவமிருந்து, கிரீடம், வேல், தெனாவட்டு, யாவரும் நலம், தென்மேற்கு பருவகாற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, நான் சிகப்பு மனிதன், வேலையில்லா பட்டதாரி, கோலமாவு கோகிலா, களவாணி என பல படங்களில் ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மா கேரக்டரில் நடித்துள்ளார்.
சொல்லப்போனால் அம்மா கேரக்டரா..சரண்யாவை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு தமிழில் அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, விஷால், ராம், பரத் என முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் அம்மாவாக நடித்துள்ளார். இதில் தென்மேற்கு பருவகாற்று படத்திற்காக தேசிய விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆனால் இத்தனை ஹீரோக்களுடன் நடித்த அவர் இதுவரை விஜய்யுடன் ஒருபடம் கூட நடிக்கவில்லை. விஜய்யுடன் குருவி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தாலும் அது அம்மா கேரக்டராக அமையவில்லை.
இதனால் ஏன் அவர் விஜய்யுடன் நடிக்கவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இதனிடையே விருமன் செய்தியாளர் சந்திப்பில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை சரண்யாவிடம் விஜய்க்கு அம்மாவாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எனக்கே தெரியவில்லை. இது தொடர்பாக வருத்தம் இருப்பதை விட ஏன் இதுவரை அமையவில்லை என தோன்றும். அது ஏதோ திருஷ்டி மாதிரி நடக்க மாட்டேங்குது.
உலகம் சிறியது. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சி ஒரு நல்ல வாய்ப்புக்காக நானும், அவரும் காத்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். ஹீரோக்கள் லிஸ்டில் அவரை தவிர அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துள்ளேன். வெளியே எங்கேயாவது சந்திக்கும் போது நாம் இருவரும் ஒரு படம் பண்ணுவோம் என விஜய் சொல்லுவார். நானும் ஆமா ஆமா என சொல்லுவேன். ஆனால் இதுவரை நடக்கவில்லை என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
விரைவில் விஜய்க்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்