திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திடீரென பழனி கோயிலுக்கு வருகை தந்தார். அங்குள்ள 600 படிகளில் சூடமேற்றி அவர் சாமி தரிசனம் செய்தார். 


நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண மணமுறிவுக்கு பின்னர் நடிகை சமந்தா படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் ஹரிஹரிஷ் இயக்கிய யசோதா படம் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தாவுக்கு அடுத்ததாக சாகுந்தலம் படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


குணசேகர் இயக்கியுள்ள சாகுந்தலம் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






முன்னதாக  myositis என்னும் அரியவகை நோயால் தான் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்த பிரச்சினை சரியாக நீண்ட காலம் என்னும் நிலையில் தன்னுடைய உடல்நலம் பற்றி வெளிப்படையாக சமந்தா அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நாம் எப்பொழுதும் நம்முடைய பலத்தை மட்டுமே முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்ததால் இதனை தெரிவிக்கிறேன். இதுவும் கடந்து போகும்” எனவும் தெரிவித்திருந்தார். மேலும் சிகிச்சைக்காக தென்கொரியாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. 


அதேசமயம் உடல்நிலை பிரச்சினையால் அவதிப்படும் மனதளவில் தயாராகும் வகையில் தீவிர உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்வது என பல வகைகளில் சமந்தா களமிறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சமந்தா வருகை தந்தார். அங்குள்ள 600 படிகளிலும் சூடமேற்றி பிரார்த்தனை செய்த அவர், பின்னர் சாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பழனி கோயிலுக்கு சமந்தா வருகை தந்த தகவலறிந்து அவரது ரசிகர்கள் அங்கு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.