தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா, பின்னர் பானா காத்தாடி, நடுநிசி நாய்கள் என்று ஆரம்பித்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.
இந்தப் படங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான், தளபதி விஜய்க்கு ஜோடியாக கத்தி, விக்ரமுக்கு 10 எண்றதுக்குள்ள, தனுஷுக்கு தங்க மகன், என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு பல படங்களில் ஜோடி போட்டார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். நடிகை என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.101 கோடிக்கும் மேல் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. மாடலிங் துறையில் பயணத்தை தொடங்கிய சமந்தா இன்று தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக காலூன்றி வரும் சமந்தா தெலுங்கு திரையுலகின் பெரிய குடும்பமாக நாகர்ஜுனா குடும்பத்துக்கு மருமகளாக மாறினார். இருவரும் 5 வருடங்களுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர் விவாகரத்து பெற்று பிரிய தயாரான போது, 300 கோடி ஜீவனாம்சம் தர நாகர்ஜுனா குடும்பம் தயாராக இருந்த நிலையில், அதை வேண்டாம் என நிராகரித்தார். சமந்தா சினிமா மூலமாக மட்டும் இன்றி விளம்பரங்களில் நடிக்கவும் கோடிகளில் சம்பளம் பெறுகிறார். சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். இதன் மூலம் மட்டுமே ஆண்டுதோறும் தோராயமாக ரூ.8 கோடி சம்பாதிக்கிறார்.
ஹைதராபாத்தில் ஒரு ஆடம்பரமான வீடும், சென்னையில் ஒரு வீடும் இவருக்கு சொந்தமாக உள்ளது. ஆடம்பர கார்களை விரும்பும் சமந்தா, அவரது கார் சேகரிப்பில் ஜாகுவார் எக்ஸ்எஃப், போர்ஷே கேமன் ஜிடிஎஸ், ஆடி க்யூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் போன்ற சொகுசு வாகனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.