தமிழ் திரையுலகில் விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தெலுங்கில் நாக சைதன்யா நடித்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் ரீமேக் மூலம் “யா மாயா செசவா” என்ற படம் மூலம் பிரதான நாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.


தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு சமந்தா நடிப்பாரா என்று கேள்வி எழுந்தபோது, அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் சமந்தா தனது பெயரை, தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனியை இணைத்து சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார். இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை சமூக வலைதளங்களில் எஸ் என்று மாற்றினார்.




திடீரென சமூக வலைதளத்தில் தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனியை சமந்தா நீக்கியதால், அவருக்கும், நாக சைதன்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது என்றும், இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், உண்மையில் சமந்தா தெலுங்கில் சகுந்தலம் என்ற இதிகாசப் படத்தில் நடிப்பதால் சமூக வலைதளங்களில் தனது பெயரை எஸ் என்று மாற்றியுள்ளார்.


நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற வதந்திக்கு தற்போது தம்பதிகள் இருவரும் வித்தியாசமான முறையில் பதிலளித்துள்ளனர். நடிகை சமந்தாவும், அவரது கணவருமான நாக சைதன்யாவும் இணைந்து கோவாவில் மிகப்பிரமாண்டமான பங்களாவை கட்டி வருகின்றனர்.


மிகவும் மாடர்னாக கட்டப்பட்டு வரும் இந்த பங்களாவின் கட்டுமான பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டு பிற்பகுதியில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பங்களாவை சிறப்பு வாய்ந்த கட்டிட கலைஞர்களை கொண்டு கட்டி வருகின்றனர்.




தங்கள் திருமண வாழ்க்கை குறித்த வதந்திக்கு, சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் அபிமான தருணங்கள் அந்த புதிய கடற்கரை வீட்டில் இருந்து ரசிகர்களுக்கு பகிரப்படும் என்பதில் உறுதியாக இருங்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விவகாரத்து என்ற வதந்திக்கு நடிகை சமந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


நடிகை சமந்தா தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்து வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.