பார்வதி திருவோத்து
மலையாளம், தமிழ், இந்தி, என பன்மொழிகளில் நடித்து வரும் பார்வதி திருவோத்து இன்று தனது 36ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெங்களூரு நாட்கள், சார்லீ, உயரே உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் சசி இயக்கிய பூ படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன், மரியான் உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.
தற்போது பா .ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் கங்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது.
நடிகையாக மட்டுமில்லாமல் சமூக அக்கறைக் கொண்ட ஒரு ஆளுமை பார்வதி. தனது பெயருக்கு பின் இருந்த மேனன் என்கிற சாதிப் பெயரை நீக்கியதன் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். திரைத்துறையில் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருபவர். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
பார்வதியை புகழ்ந்த சமந்தா
இந்நிலையில், பார்வதி திருவோத்துவின் பிறந்தநாளுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதியை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ”திரைப்படங்களில் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு ஹீரோதான் . பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ என்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கலான்
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்து ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடி இனத்தின் போராட்டக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. வரும் மே மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.