டேண்டலியன் என்கிற தாவரத்தை உட்கொண்டால் லிவர் பிரச்சனைகள் சரியாகும் என்று சொன்னதற்காக அவரை மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


சமந்தா


நடிகை சமந்தா தற்போது யூ டியூப் சானல் ஒன்றின் வழியாக மையோசிடிஸ் குறித்து விவாதித்து வருகிறார். தசை அழற்சி நோய் என்று சொல்லப்படும் இந்த மையோசிடிஸ் நோயின் பாதிப்புகள் இதனை குணப்படுத்தும் விதம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசி வருகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான இந்த தொடரில் சமந்தா கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது குறித்து பேசினார். இந்த வீடியோவில் அவருடன் ஊட்டச்சத்து நிபுனர் ஒருவரும் கலந்துகொண்டார். டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். 


3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்


இந்த வீடியோவில் பேசப்பட்ட கருத்துக்களை மருத்துவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் சமந்தாவையும் அவருடன் பேசிய அந்த ஊட்டச்சத்து நிபுணரையும் அவர் திட்டி பதிவிட்டுள்ளார். தனது பதிவில் அவர் “அது எப்படி இவ்வளவு ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் பிரபலங்கள் தவறான ஆட்களை சென்று சேர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.  உடம்பைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவரை வைத்து மருத்துவம் , ஆரோக்கியத்தைப் பற்றி இவர்களால் எப்படி பேச முடிகிறது. சமந்தாவுடன் பேசும் இந்த நபர், தான் பேசுவது எவ்வளவு அபத்தமான கருத்து என்று தெரியாமல் பேசுகிறார். மூலிகைகளை வைத்து தசை அழற்சி  நோயை குணப்படுத்திவிட முடியும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நபர் பரப்பி வருகிறார். 






டேண்டலியன் என்பது காய்வகைகளில் ஒன்று. பெரும்பாலான மக்கள் இதனை காட்டுச்செடி என்றே நினைக்கிறார்கள். சேலட்டில் இதை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். இந்த வீடியோவில் டேண்டலியனை கொண்டு கல்லீரலை சுத்தப்படுத்த முடியும் என்று சமந்தாவின் ஆலோசகர் பேசுகிறார். ஆனால் அப்படியான எந்த ஒரு சான்றும் நிரூபிக்கப்படவில்லை.  டேண்டலியனின் மருத்துவ பயன்கள் குறித்து இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.


விலங்குகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை வைத்து நம்மிடம் சில தரவுகள் இருக்கின்றன. அப்படியான நிலையில் இந்த தாவரங்களை மருத்துவ பயன்களுக்கு மனிதர்களுக்கு பரிந்துரைக்கக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.