தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி, தனது பள்ளி கால காதல் கடிதம் எழுதிய கதையை வெளிப்படுத்தியுள்ளார். 


சாய் பல்லவி:


கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி கோவையில் பள்ளிப்படிப்பையும், ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பையும் முடித்தார். அவருக்கு சிறுவயது முதலே நடனத்தில் தீராத காதல் இருந்த நிலையில், பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு கஸ்தூரி மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் எண்ட்ரீ கொடுத்தார். இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டினார். 


சாய் பல்லவிக்கு மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. ஒரு ரியாலிட்டி ஷோவின் வீடியோ பார்த்து அந்த படத்தில் மலர் டீச்சர் கேரக்டருக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்தார். மலர் டீச்சரை  மலையாளம், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். அது சாய் பல்லவியின் அடையாளமாகவே மாறிப்போனது. 


நல்ல கதைகள்:


இதன்பின்னர் தமிழில் தியா, மாரி 2, கார்கி, என்.ஜி.கே., பாவக்கதைகள் என குறிப்பிட்ட படங்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்துள்ளார். தெலுங்கிலும் ஷியாம் சிங்க ராய் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.  இப்படியான சாய் பல்லவி குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிப்பது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. 


இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். என்னை எல்லோரும் தங்கள் வீட்டில் ஒரு பெண்ணாக உணர்கிறார்கள். அதனால் நான் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதிக ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். அதனால் தாமதம் என தெரிவித்திருந்தார். சாய் பல்லவி இப்போது கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 


காதல் கடிதம்:


இந்நிலையில் சாய் பல்லவி நேர்காணல் ஒன்றில் தான் காதல் கடிதம் எழுதிய அனுபவத்தை தெரிவித்துள்ளார். அதில், “நான் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது என்னுடம் படித்த மாணவனை மிகவும் பிடித்திருந்தது. அவன் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. காதல் தான் என்று சொல்லக்கூட தெரியவில்லை. அப்படியான நிலையில் என் விருப்பத்தை தெரிவிக்க காதல் கடிதம் எழுதினேன். ஆனால் அந்த மாணவனிடம் எப்படி கொடுப்பது என தெரியாமல் புத்தகத்தில் வைத்துக் கொண்டேன். 


ஆனால் எதிர்பாராமல் அந்த கடிதம் என் அம்மாவின் கண்ணில் பட்டுவிட்டது. அவருக்கு உச்சக்கட்ட கோபம் வந்து என்னை அடித்து விட்டார். அவர் என்னை முதலும், கடைசியுமாக அடித்தது அன்றைக்கு மட்டும் தான். அதன்பிறகு அவருக்கு பிடிக்காத எதையும் நான் பண்ணமாட்டேன். என் அம்மா எனக்கு முன்மாதிரி என சாய் பல்லவி தனது காதல் கதையை தெரிவித்துள்ளார்.