தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்த பேச்சுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், சாய் பல்லவியின் இந்த வேண்டுகோள் ஓம் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நடிகை சாய் பல்லவி வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிப்பதை நிறுத்தியதை குறிப்பிட்டு அவர் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓம் . தனுஷின் 55-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தனுஷின் ரசிகர்கள் வைத்திருந்த கொடிகளைப் பார்த்தபோது அரசியல் மாநாட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனுஷிடன் சாய் பல்லவி கோரிக்கை
நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி "இங்கு வரும் வழியில் நிறைய கொடிகளைப் பார்த்தேன். ஏதோ அரசியல் மாநாட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், உங்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். உங்களுக்கு எது நல்லதோ அது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
சமீபத்தில் விஜய் சார் அரசியலுக்கு சென்றுவிட்டார். அதனால் அவர் நடிப்பதில்லை. இதனால் தனுஷ் சாரும் தொடர்ந்து நடிகராக நம்முடன் இருக்க வேண்டும் என்று நான் நம்பினேன். அதற்காக பிரார்த்தனை செய்தேன்.
தனுஷ் போன்ற உண்மையான நடிகர்கள் நமக்குத் தேவை. அவர் நடிக்கும் எதார்த்தமான கதைகளும், கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொல்லாதவன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நிறைய பேர் அந்த பைக்கை வாங்கினார்கள். அந்தப் படத்தின் பைக், ஸ்டைல் என அனைத்தும் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு உண்மையான நடிகராக இருக்க வேண்டும்.
எனவே நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். இல்லையென்றால், சிறந்த நடிகரான உங்களை நாங்கள் அனைவரும் மிஸ் செய்வோம். இதுதான் என்னுடைய வேண்டுகோள்."
