சாய் பல்லவி


நடிகை சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பும் மதிப்பும் இருந்து வருகிறது. மற்ற நடிகைகளை சினிமா தவிர்த்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்துவரும் சூழலில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வழியாக மட்டுமே ரசிகர்களின் மதிப்பை பெற்றவர் சாய் பல்லவி. சினிமா தவிர்த்து தனது குடும்பத்துடன் நேரம் செலவிடும் சாய் பல்லவி அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதில் பெரிதாக விருப்பம் காட்டுவதில்லை. 


அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சாய் பல்லவி பாலிவுட் நடிகைகள் ப்ரோமோஷன்களுக்காக பி.ஆர் ஏஜன்ஸிக்களை வைத்துக்கொள்வது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


பி.ஆர் ஏஜன்சி எதற்கு ?


நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி ' பாலிவுட்டில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் நீங்க பி.ஆர் ஏஜன்சி வைத்துக் கொள்கிறீர்களா என்று கேட்டார். எதற்கு என்று அவரிடம் கேட்டேன். நீங்க படம் நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் உங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவிட்டு உங்களை பூஸ்ட் செய்வார்கள். அப்படி செய்வதால் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் ஏதாவது வருமா என்று நான் கேட்டேன். அதற்கு அவரிடம் பதில் இல்லை. உங்களைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள் அதற்கு தான் இந்த பி.ஆர் ஏஜன்சி என்று அவர் சொன்னார். எல்லாரும் என்னைப் பற்றி எதற்கு பேச வேண்டும். என் படம் வெளியாகும் போது நான் நேர்காணல்களில் பேசுகிறேன். அதை தவிர்த்து என்னைப் பற்றி எதற்கு எல்லாரும் பேச வேண்டும் .எப்போதும் என்னைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு போர் அடித்துவிடும் . இப்படி பி.ஆர் ஏஜன்சி வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு இதெல்லாம் புரியவில்லை. எனக்கு புரியாத விஷயத்திற்குள் நான் போவதில்லை. " என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். பிரபல நடிகைகளே இந்த விஷயம் பற்றி பேசாத நிலையில் சாய் பல்லவி துணிச்சலாக இதை பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது